துருக்கிக்கான அனைத்து ஆயுத ஏற்றுமதிகளையும் ஜேர்மன் முடக்கியுள்ளது. ஜேர்மன் பிரஜை உட்பட பல மனித உரிமை ஆர்வலர்களை துருக்கி கைது செய்ததை தொடர்ந்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி மேற்கொள்ளப்பட்டுவரும் மற்றும் எதிர்காலத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ள துருக்கிக்கான அனைத்து ஆயுத விநியோகங்களையும் நிறுத்துவதாக ஜேர்மன் அறிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
துருக்கியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற முறியடிக்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சியை அடுத்து 11 வகையான ஆயுத விநியோகம் ஜேர்மனியால் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், பயங்கரவாத குழுவுடன் தொடர்புபட்டிருப்பதாக தெரிவித்து ஜேர்மனியர் உட்பட ஆறு மனித உரிமை ஆர்வலர்களை கைது செய்ய துருக்கி நீதிமன்றமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது.
குறித்த நீதிமன்ற உத்தரவை தொடர்ந்தே இந்த அதிரடி தடையை ஜேர்மன் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது