இளஞ்செழியன் ஒரு இரும்பு மனிதன்
கால அந்தியின் கறுப்பு நிறத்தோன்
சுடுகலன்களைவிடவும்
சீரிய நேர்மையின் சிகரம் ஆதலால்தான்
ஒடித்துவிடப் பார்க்கிறார்கள்
மூடர்களே!
நீங்கள் ஊதியதும் காணாமற் போக
இளஞ்செழியன் ஒன்றும் இலவம்
பஞ்சல்ல இரும்பு
காற்று மண்டலத்தில்
இன்னும் கனன்றபடிதான் இருக்கிறது
மாவீரர் ஆத்மாக்கள்
எப்போதும் எரி மழையாய்
எத்தர்கள் தலையில் இறங்கும்
ஒழுக்கத்தின் நவநாகரீகக் கூடு
எம் புலி பிறந்த காடு
இன்று அழுக்காக்கப்படுகிறது
இருண்மையின் பாரிய புகை
ஈழ மண்ணை மறைக்கும் போதெல்லாம்
வெடித்தெழுகிற உத்தமர்களை
வேட்டுவைத்து தகர்க்கத் திரிகிறது
பல கூட்டம்
ஆத்மார்த்தமான உயிர்த் தியாகங்களை
சுமந்த தேசம்
இங்குதான் நரிகள் பலதையும்
நாய்கள் என நம்பி வீட்டில் வளர்த்த
குற்றத்துக்காய்
நடுத்தெருவில் நிற்கிறோம்
சிறுபான்மை இனமென்பதற்கு
எடுத்துக்காட்டாய் பலர்
சின்னத்தனமாய் நடக்கிறார்கள்
விடுதலை ஒன்றும்
பொழுதுபோக்கிற்காய் பாடும் பாடல் அல்ல
அடிமை விலங்கை உடைத் தெறிய
வீரர்கள் எழுப்பும் வேட்கையின் ஒலி
அகிம்சையாய் கேட்டோம் விடுதலை
அன்று திலீபன் சரிந்த
அதே இடத்தில்
இன்னொரு முறை நடந்தேறியிருக்கிறது
நயவஞ்சக நாடகம்
இரத்தமும் இரும்புமே புரட்சியின்
தீர்வு என்றான் ஜேர்மானிய
புரட்சியாளன் பிஸ்மார்க்
நாங்கள் அதையும் கடந்துவிட்டோம்
எங்கள் பூர்வீகம் அறியாத பேடிகள்
ஒதுங்கித் திரியும் பாம்பின் தலையில்
ஊசி ஏற்றப் பார்க்கிறார்கள்
இனம் தின்பது எத்தர்கள் அல்ல
எம் இனத்தை தின்னக் கொடுப்பதெல்லாம்
பதவிக்கு சோரம் போன சில
பித்தர்கள்
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும்”
இது புத்தனுக்குத் தெரியும்…..
ஈன எத்தர்களுக்கு
இது விரைவில் புரியும்..
– அனாதியன்