கடந்த சனிக்கிழமை என்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது அப்பகுதியில் பலர் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்ததில் எந்தவித உண்மையுமில்லையென யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் அவரது மெய்ப்பாதுகாவலரான சார்ஜன்ட் ஹேமச்சந்திர உயிரிழந்திருந்தார். நேற்று அவரது இறுதிக் கிரியைகளின் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இந்த தாக்குதல் சம்பவமானது என்னை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டது. நான் முதலாவது சாட்சி, பொலிஸ் கான்ஸ்டபிள் விமலரத்ன இரண்டாவது சாட்சி.
எனது சாரதி மூன்றாவது சாட்சி, தாக்குதல்தாரி தப்பிச் செல்வதற்காகப் பறித்துச் சென்ற மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் நான்காவது சாட்சி.
என்னுடைய மெய்ப்பாதுகாவலரின் இடுப்பிலிருந்து துப்பாக்கியை தாக்குதல்தாரி எடுத்த போது அதை நான் கண்டேன். உடனடியாகக் காரில் இருந்து இறங்கி வந்தேன்.
அந்தநேரத்தில் உப பரிசோதகரும் தாக்குதல்தாரியும் ஒருவரையொருவர் பிடித்தபடி இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது தாக்குதல்தாரி தனது கையை மேல் நோக்கி தூக்கியிருந்தார்.
அவரது கையில் துப்பாக்கி இருந்தது. அதைப் பார்த்ததும் நான் அவர்களுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்தபடியே துப்பாக்கியைக் கீழே போடு என்று சத்தமிட்டேன்.
அதன் பின்னரே உப பரிசோதகரைத் தாக்குதல்தாரி தள்ளிவிட்டு அவரை நோக்கிச் சுட்டார். பின்னர் என்னை இலக்கு வைத்துத் துப்பாக்கியை நீட்டினார். அப்போது எனது இரண்டாவது மெய்ப் பாதுகாவலர் என் பின்னால் நின்றிருந்தார்.
அவர் உடனடியாக என்னைக் காருக்குள் தள்ளிவிட்டார். அதன் பின்னரே தாக்குதல்தாரியை நோக்கி அவர் சுட்டார். இவ்வளவும் நடந்தது கிட்டத்தட்ட 10 அடிச் சுற்று வட்டாரத்துக்குள்தான்.
நல்லூர்ச் சந்தி அது. துரதிஸ்டவசமாக அந்த நேரத்தில் அந்த இடத்தில் யாரும் இருக்கவில்லை. பொலிஸார் அந்த இடத்தில் பலர் இருந்தனர் என்று இப்போது கூறுகின்றார்கள்.
ஆனால் உண்மையில் அப்படி யாரும் இருக்கவில்லை. எனது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் சூடுபட்டு வீழ்ந்து கிடக்கிறார்கள். அவர்களைத் தூக்கி ஏற்றுவதற்கு உதவி செய்யக்கூட அங்கு யாரும் இருக்கவில்லை.
ஒரு நீதிபதியாகிய நானும் எனது சாரதியும்தான் அவர்களைத் தூக்கிக் காரில் போட்டுக்கொண்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம். போகும்போதே பிரதிப் பொலிஸ்மா அதிபருக்குச் சம்பவம் குறித்துத் தெரிவித்தேன்.
11.30 மணிவரை நான் வைத்தியசாலையில் இருந்தேன். 12.20 மணியளவில் உப பரிசோதகர் உயிரிழந்தார். இதுதான் அன்று உண்மையில் நடந்தது.
நான் சொல்வது உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால் சம்பவத்தின் நேரடியான முதல் சாட்சி நான். மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கின்றேன்..
என்னுடைய மெய்ப்பாதுகாவலர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை. அவர்களை இலக்கு வைக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை.
அப்படி யா