முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஒடிசாவில் உள்ள வீலர் தீவுக்கு அப்துல் கலாம் பெயரை முறைப்படி சூட்டி அரசு பெருமைப்படுத்தியது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2-ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் அப்துல் கலாமுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பில் அப்துல் கலாமுக்கு அமைக்கப்பட்ட நினைவகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் அப்துல் கலாமின் 2ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் கலந்து கொண்டு, கலாமுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவுக்கு அப்துல் கலாம் பெயரை சூட்டுவது தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பாணை நகல் பட்நாயக்கிடம் வழங்கப்பட்டது.
நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய பட்நாயக், “முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அனைவராலும் விரும்பப்பட்டவர். அவர் விஞ்ஞானியாக இருந்தபோது ஒடிசாவில் உள்ள சாந்திப்பூர் மற்றும் வீலர் தீவில் தான் அதிகம் தங்கி பணியாற்றி வந்தார். ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் தனது பணியின்போது பெரும்பாலான நேரம் இந்த இடங்களில்தான் தங்கியிருந்து பணி செய்தார்’’ என தெரிவித்துள்ளார்.
வீலர் தீவுக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.