கடுமையான எதிர்ப்புகளுக்கு நடுவே ஜப்பான் கடல் எல்லைக்கு அருகே வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியா தனது கிழக்கு கடற்கரை பகுதியில் புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் கடல் எல்லையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் அவசரமாக நடைபெற்ற ஜப்பான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் ஷின்ஸோ அபே, தங்கள் நாட்டின் கடல் எல்லைக்கு அருகில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக் கூடியது என்று அமெரிக்கா, தென்கொரிய தெரிவித்தன. ஆனால் இது குறைந்த அளவிலான தூரம் சென்று தாக்கக் கூடியது என்று ரஷ்யா கூறியுள்ளது.
ஜூலை 27ம் திகதி கொரிய போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 64வது தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை வெற்றி தினமாக வடகொரியா கொண்டாடி வருகிறது. ஆகையால், இதனையொட்டி ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதற்கான அறிகுறிகள் தெரிவதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்பு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.