மைத்திரி – ரணில் அரசாங்கத்துக்கெதிராகவும், மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும் பிக்குகளை ஒன்று திரட்டப்போவதாக மொறத்தெட்டுவே ஆனந்ததேரர் தெரிவித்துள்ளார்.
15பிக்குகளைக் கொண்ட, தாய்நாட்டைப் பாதுகாக்கும் தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் நேற்று பொரளையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த அமைப்பானது அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களின் ஆசீர்வாதத்துடனேயே ஆரம்பமாகியது.
மாற்றமொன்றை எதிர்பார்த்தே நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் புதிய அரசியல் யாப்பொன்றை தயாரித்துவரும் அதேவேளை மறுபுறத்தில் நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்று வருவதாகவும் மொறத்தெட்டுவே ஆனந்த தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பதற்கு மைத்ரி – ரணில் அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஆனந்த தேரர் இதனாலேயே பௌத்த பிக்குகள் தலைமையில் நாட்டு மக்களை தெளிவுபடுத்துவதற்காக பலமான அணியொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.