யுத்தத்திற்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் பாடசாலைக்குச் செல்லாத சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம், பிரமந்தனாறு, கல்லாறு, ஊரியான், சிவபுரம், மற்றும் கோரக்கன் கட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்களே பாடசாலைக்குச் செல்லாத நிலை தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 572 சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லையெனத் தெரிவிக்கப்பட்டதுடன், 84 வரையான சிறுவர்கள் ஒழுங்கற்ற வரவைக் கொண்டுள்ளனர் எனவும்தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு இத்தொகை அதிகரித்துள்ளதாகவும், இவர்களில் அதிகமானவர்கள் குடும்ப வறுமை காரணமாகவே பாடசாலைக்குச் செல்லாத நிலமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சிறுவர்களில் பலர் சட்டவிரோதத் தொழில்களான கசிப்புக் காய்ச்சுதல், சட்டவிரோத மணல் அகழ்தல் போன்ற பணிகளுக்கு குறைந்த வேதனத்துடன் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர் அபிவிருத்தி தொடர்பாக அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும், மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் சிறுவர்களுக்கென தனியான அலகுகள் உள்ளபோதிலும், இந்தச் சிறுவர்கள் விடயத்தில் சரியான கரிசனை காட்டப்படுவதில்லையென பல்வேறு தரப்புக்களும் குற்றம் சாட்டியுள்ளன.