வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த தமிழ் பெண்கள் காவல்துறையில் இணையவேண்டுமென வடமாகாண மகளிர், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற துணியிலான பைகளைப் பயன்படுத்துவதற்கான தையல் பயிற்சி நெறி அறிமுக விழாவில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் பெண் காவல்துறையினருக்கு 500 வெற்றிடங்கள் உள்ளன. அரசாங்க வேலையை எதிர்பார்த்திருக்கும் பெண்கள் காவல்துறையில் இணைந்து பணியாற்ற முடியும்.
அலுவலகங்களில் பணியாற்றுவதுபோல் காவல்துறை நிலையங்களிலும் பெண்களுக்கு பகல் நேரப் பணியே வழங்கப்படுகின்றது. உயர்தரம் வரை கல்வி கற்றவர்களுக்கு உப பரிசோதகர் பதவி வழங்கப்படுகின்றது.
வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் காவல் நிலையத்திற்குச் சென்று ஆண் காவல்துறையினரிடம் முறைப்பாடு கொடுக்கும்போது முழுமையாக கொடுக்காது விடுகின்றனர்.
இந்த வழக்கு நீதிமன்றுக்கு வரும்போது அவர்களால் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டுக்கும், பாதிக்கப்பட்ட பெண் அளிக்கும் சாட்சியமும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
இந்த நிலை மாறவேண்டுமானால், வடக்கிலுள்ள இளம் பெண்கள் காவல்துறையில் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டுமெனத் தெரிவித்தார்.