பெங்களூரு சிறையில் நடந்த முறைகேடுகள் பற்றி நான் சிறைத்துறை டி.ஜி.பி மற்றும் கர்நாடக அரசு உயர் அதிகாரிகளுக்கு எழுதிய 2 கடிதங்களையும் உயர்மட்டக்குழுவிடம் ஒப்படைத்து விட்டேன் என்று முன்னாள் டி.ஐ.ஜி.ரூபா கூறினார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு சலுகைகள் செய்து கொடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும் முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கிக்கும், மற்ற கைதிகளுக்கும், ஓட்டல் உணவு, கஞ்சா மற்றும் மருந்து, மாத்திரைகள் கிடைக்க உதவி செய்யவும் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் கூறி இருந்தார்.
இது குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி வினய்குமார் தலைமையில் பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ரவி, மைசூரு சிறை சூப்பிரண்ட ஆனந்த் ரெட்டி ஆகியோர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த குழுவினர் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பியாக இருந்து ஓய்வு பெற்ற சத்தியநாராயணராவ் மற்றும் டி.ஐ.ஜி ரூபா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது தான் டி.ஜி.பிக்கு எழுதிய கடிதங்களுடன் ஆதாரத்தையும் ஒப்படைத்து இருப்பதாக ரூபா கூறினார். இது குறித்து அவர் நிருபரிடம் கூறியதாவது:-
உயர்மட்டக்குழுவிடம் நான் சிறைத்துறை டி.ஜி.பி மற்றும் கர்நாடக அரசு உயர் அதிகாரிகளுக்கு எழுதிய 2 கடிதங்களையும் ஒப்படைத்து விட்டேன். இது தவிர சிறையில் நடந்த முறைகேடுகள் மற்றும் விதிமுறை மீறல் புகார்கள் குறித்த ஆதாரங்களையும் ஒப்படைத்து உள்ளேன். எனது புகார் குறித்து நேர்மையாகவும், உண்மையாகவும் விசாரணை நடத்தினால் சிறையில் நடந்து வரும் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
ரூபாவின் புகார்களை ஓய்வு பெற்ற சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி சத்திய நாராயணராவ் மறுத்து உள்ளார். டி.ஐ.ஜி ரூபா கைதிகள் பேசிக் கொள்கிறார்கள் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்து உள்ளார். என் மீது எந்த களங்கமும் இல்லை என்றும், உயர்மட்டக்குழு விசாரணையில் உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் கூறினார். நான் நேர்மையானவன் என்பது அப்போது தெரியும் என்றும் அவர் கூறினார்