மாகாண சபையின் காலம் முடிவடைய ஒரு வருட காலமே இருப்பதனால் அந்த காலப் பகுதிக்குள் மக்களுக்கு நல்ல சேவையை வழங்க எங்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளை அகற்றி சேவையாற்றவுள்ளோம் என வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான சந்திப்பின் பின்னர் முதல்வர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் ஏனைய பங்காளிகள் கட்சி தலைவர்களுடன் இணைந்து தமிழ் மக்களின் நலன் கருதி முடிவிற்கு வந்திருக்கின்றோம்.
அதில் மாகாண சபைகள் தொடர்பில் முதலமைச்சர் தனக்கிருக்கிருக்கும் சட்டரீதியான தற்துணிவு அதிகாரங்களை பிரயோகித்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்த அங்கத்துவக் கட்சிகள் சம்மதத்தை வெளிப்படுத்துகின்றன, அமைச்சர்கள் மாற்றப்பட்டால் கூறித்தவொரு அமைச்சர் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டதாக அர்த்தப்படாது, அமைச்சரவை நியமனம் தொடர்பில் அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனை கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என்ற தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம்.
மாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைய ஒருவருட காலம் இருப்பதால் போதுமானவரை எங்களுக்குள் பிரச்சினைகளை தவிர்த்து மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்கவேண்டும் என்பதால் எங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை அகற்றி இந்த தீர்மானத்திற்கு வந்திருக்கின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பங்காளிக் கட்சி தலைவர்கள் பல வருடங்களுக்கு பின்னர் ஒருமித்த கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். அரசியலமைப்பு சம்பந்தமான ஒரு கூட்டத்தை நடாத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடினோம். வருங்காலம் நல்ல காலமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு உண்டு.
இந்த கூட்டத்தின் மூலம் ஒரு அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என எதிர்பாக்கப்படுகிறது ஆயினும் அது தொடர்பில் நான் சிந்திக்கவில்லை” எனவும் தெரிவித்தார்.