உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த சோதனைகளுக்கு முடிவு கட்டவும், சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிப்பதற்கு அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
அந்த தீர்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 15 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றன.
இதில் நிரந்த உறுப்பு நாடுகள் பட்டியலில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளன.
இந்த நிரந்த உறுப்பு நாடுகள் பட்டியலில் ரஷ்யாவும், சீனாவும் வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமா என்ற கேள்வி எழுந்தது.
அதில் பேசிய ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, இதுவரை நடத்திய பேச்சுவார்த்தை போதும். இனி செயல்பட வேண்டிய நேரம். வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அனைவரும் ஒன்றிணைவோம்.
இவ்வாறு நாம் ஒன்றிணைவதன் மூலம் வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகளையும், அணுசக்தி மீதான பொறுப்பற்ற தன்மையும் முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார்.
அதன் பின் இதுதொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிய, அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனால் வடகொரியாவின் நிலக்கரி, இரும்பு, இரும்பு தாது, லெட், லெட் தாது மற்றும் கடல் உணவு உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்படும் எனவும் அதுமட்டுமல்லாமல் வங்கிகள், வெளிநாட்டு நிறுவனங்களுடனான கூட்டு செயல்பாடு ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்த புதிய பொருளாதார தடை மூலம் வடகொரியாவின் வருவாயில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.