யாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும்இ கிளிநொச்சி திருவையாறு, கரவெட்டி கரணவாய் கிழக்கு நாவலர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் மகாலிங்கம் அவர்கள் 05-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் இலச்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு வேதாத்தை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
மதன்ராஜ்(பிரித்தானியா), மேனகா(பிரித்தானியா), மேகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மு.ஊ.மகாதேவன், பூபதி, கமலாதேவி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாக்கியம்(தங்கம்), காலஞ்சென்ற பொன் கணேசன்(ஒய்வுநிலை வட்டாரக்கல்வி அதிகாரி), பொன் பாலச்சந்திரன்(ஓய்வுநிலை அதிபர்), மங்களம், சரஸ்வதி, சிவப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரியங்கா(பிரித்தானியா), ராஜ்குமார்(பிரித்தானியா), ரிசாந்தன்(உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஜானி, தனுஸ்கா, டனிஷ், ஜெசிக்கா, டனுஷா, டனிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணிக்கு சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நாவலர்மடம்,
கரணவாய் கிழக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகாலிங்கம் மதன்ராஜ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773984903
சௌந்தரி கணேசன் உள்ளத்தில் இருந்து …
எனது அம்மாவின் தம்பி, எனது மாமாவின் மரணம் என்னை வாட்டுகிறது. நினைவுகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை. சாதாரண மாமாக்களைவிட எங்கள் மாமாக்களுடன் நாங்கள் அதிக நெருக்கம். ஒரே வீட்டில் அவர்களுடன் நீண்ட காலம் வாழ்ந்ததால் பிரித்துப்பார்க்க முடியாத நெருக்கம்.
மூடிவிடமுடியாத ஞாபகங்களின் பெரும்பகுதியை நிரப்பியவர்களில் இவரும் ஒருவர். சிறுவயதில் நான் அதிகமாக குழப்படி செய்வதால் என்னை தனக்குப் பிடிக்காது என்று பாவனை காட்டினாலும் என்னை எனக்காகவே அதிகமாக நேசித்தவர்.
சிறுவயதில் அக்காவும் நானும் சண்டை போடும் போதெல்லாம் என்ன ஏதென்று கேட்காமல் என்னையே ஒவ்வொரு தடவையும் நோகாமல் தண்டிப்பதால் என்மீது மாமாவுக்கு நேசமில்லையென்று நான் அப்போது நினைப்பதுண்டு. காலப்போக்கில் என்மீது அவர் கொண்ட அக்கறையின் புரிதல்கள் ஏற்பட அவர்மீது நான் வைத்திருந்த நேசமும் மரியாதையும் வார்த்தைகளைத் தாண்டியவை. எமது கல்வியிலும் எம்மை நல்வழிப்படுத்துவதிலும் எமது தந்தையைவிட அதிக அக்கறை காட்டியவர். தனது சகோதர சகோதரிகளின் பிள்ளைகள்மீது இத்தனை அன்பை ஒருவர் மௌனமாக வெளிப்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்.
எங்களது இன்ப துன்பங்களில் உரிமையுடன் பங்கெடுத்த எமது மாமாவை நாம் இழந்துவிட்டோம். எம்மைச்சுற்றி ஓர் பாதுகாப்பு வெளியை எப்போதும் உருவாக்கிக்கொண்டிருந்த மூன்று மாமாக்களில் எஞ்சியிருந்த இந்த மாமாவையும் இன்று நாம் இழந்துவிட்டோம்.
எனது அம்மாவின் செல்லத் தம்பி. சிறுவயதிலேயே தனது தாயை இழந்து எனது அம்மாவின் அரவணைப்பிலும் அன்பிலும் வளர்ந்தவர். தனது அன்பை வெளிப்படையாக காட்டத் தெரியாத மிகுந்த அன்பான மாமா எங்கே போனார் என்ற கேள்வி என்னைக் காயப்படுத்துகின்றது. விடைபெறாமல் விட்டுப் போனதால் அழத்தோன்றுகிறது. எனது தாய் இந்த இழப்பை எப்படித் தாங்கப்போகின்றார் என்ற எண்ணம் என்னை சுட்டெரிக்கின்றது.
ஆனாலும் அவரது இதயத்தில் மூடப்பட்டிருக்கும் எல்லா துயரங்களுக்கும் அவரை வருத்திய நோய்களுக்கும் விடை கிடைத்துவிட்டது என்பது ஒருவகையில் ஆறுதல்படுத்துகிறது.
அன்பான அழகான ஆன்மா ஒன்றை நாம் தரிசிக்க கிடைத்தது எமக்கான வரங்களில் ஒன்று. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். We miss you Mama, we all love you so much.
ஓர் விலைமதிப்பற்ற
புன்னகையொன்றின்
புகைப்படத்தைப் பார்க்கிறேன்
துயரத்தின்
இருண்ட மேகங்கள்
காற்றைத் துரத்த
இலையுதிர்கால இலைகளைப்போல்
அழுதுகொண்டே வீழ்கிறேன்
ஏன் இந்த வலி
இதிலிருந்து எப்படி மீள்வது
இத்தனை கொடுமையானதா மரணம்
இவ்வளவு மென்மையானதா மனசு
என் இறக்கைகளில் ஒன்று
மௌனமாக உதிர
ஓர் சூடான நினைவகம்
இருட்டில் உருவாகி
கடுமையான குளிர்ச்சோகம்
கால்வரை உறிஞ்சுகிறதே!
வாழ்க்கைக் கடலின்
ஓர் குளிர்கால ஞாபகம்
வெற்றிடமாவதை
நிரப்ப முடியவில்லை
அழகிய நினைவுகளில்
வேர்விட்ட விருட்சமொன்று
விதையாகிப்போவதை
ரசிக்க முடியவில்லை
நாங்கள் துயரப்படுவதை
அவர் பார்க்க விரும்புவதில்லை
என்ன செய்வது
ஓர் கோடைச் சூரியன்
கோபமாகச் சுட்டெரிக்கிறான்
சோர்விலிருந்து விடுபட்டு
சோகத்தை கற்றுத்தெளிந்து
இதையும் கடந்துபோக
எனக்கு அனுமதி வேண்டும்