ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதிகளிலுள்ள இந்தோ – திபெத் பாதுகாப்பு படையினருக்கு ராக்கி அணிவித்து உள்ளூர் பெண்கள் மகிழ்ந்துள்ளனர்.
இந்தியாவின் வட மாநிலங்களில் ராக்கி பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழமை. இந்நிலையில், இம்முறை எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினரை தமது சகோதரர்களாக கருதி, ஜம்மு – காஷ்மீர் பெண்கள் ராக்கி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
தமது குடும்பத்தாரை விட்டு வெகு தொலையில் கடமையில் உள்ள தமக்கு, இவ்வாறு ராக்கிகளை அணிவித்து, இனிப்புகளை வழங்கி ராக்கி பண்டிகை கொண்டாடியமை மிகவும் மகிழ்வான தருணம் என, எல்லை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வட இந்தியாவின் மதுரா மாவட்டத்தில் வசிக்கும் விதவைகள் ஒவ்வொரு வருடமும் டெல்லியிலுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வாசஸ்தலத்திற்குச் சென்று, பிரதமருக்கு ராக்கி அணிவித்து மகிழ்வர். அந்தவகையில், இம்முறையும் மதுராவில் உள்ள விதவைகள் டெல்லி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.