நாங்கள் எங்களுடைய சொந்த மண்ணில் மீள்குடியேறி வாழ்வதற்காகவே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் எமது நிலங்களை விடுவிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை இராணுவத்தினரிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் இந்த வீதியிலேயே தினமும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே எமது மண்ணில் நாங்கள் மீள்குடியேறுவதற்கான சரியான முடிவை கூற வேண்டும்.
இறுதி யுத்தத்தின் போது இழப்புக்களை சந்தித்த நாங்கள் இன்னமும் அபிவிருத்தியடையவில்லை. எமது சொந்த நிலங்களில் மீள்குடியேறி எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை விரும்புகின்றோம்.
எனவே எமது போராட்டத்தை நிறைவு செய்வதற்கு எமது பூர்வீக நிலங்களை விடுவிப்பது தொடர்பில் தெளிவான முடிவை கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.