ஐ.நா தலைமையில் கடந்த சனிக்கிழமை ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு விதிக்கப்பட்ட புதிய தடைகள் யாவும், நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் உள்ளது என இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடகொரியாவின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
அணுவாயுத சோதனைகள் காரணமாக புதிய தடைகளை விதித்தமை குறித்து அதிருப்தியடைந்துள்ள வடகொரியா, அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளது
வடகொரியாவின் மேற்படி எச்சரிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த தென்கொரியா, பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையை வடகொரியா புறக்கணித்துள்ளது எனவும் அவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல் நியாயமற்றது எனவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள குறித்த தடைகள் அதன் ஏற்றுமதி வருவாயை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேசத்தின் கண்டனங்களையும் மீறி, தொடர் ஏவுகணைச் சோதனைகளை வடகொரியா நடத்திய காரணத்தினாலேயே புதிய தடைகள் விதிக்கப்பட வேண்டும் என ஐ.நா பாதுகாப்புச் சபையினால் தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும் குறித்த தடை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த வடகொரியா, தற்பாதுகாப்பு நோக்கிலேயே தான் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருவதாகவும் எக்காரணம் கொண்டும் அந்த விடயம் தொடர்பில் தான் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை எனவும் தெரிவித்திருந்தது.
அத்துடன், வடகொரியா மீது விதிக்கப்பட்ட தடைகளின் பின்னணியில் அமெரிக்காவே முக்கிய பங்காற்றியது எனவும் அதனால் வடகொரியாவுக்கு அமெரிக்காவிடம் இருந்து பாரிய அச்சுறுத்தல் உள்ளது எனவும் தெரிவித்திருந்தது.