கன்னியா வெந்நீரூற்று 99 வருடங்களுக்கு பேரம்பேசப்பட்டுவிட்டது. இதற்கு யாருடைய அல்லது எந்த அரசியல்வாதியின் கையில் பணம் பரிமாறப்பட்டதோ தெரியாது. மனவேதனையுடன் நாம் கேட்பது கன்னியா வெந்நீரூற்றுப்போல் எப்போது திருக்கோணேஸ்வரம் பேரம் பேசப்படும் என திருகோணமலை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று மாலை திருகோணமலை சன்சென் விடுதியில் இடம்பெற்ற திருமலை நவத்தின் இராவண தேசம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
கடந்த தேர்தல்களில் மக்கள் வாக்களித்தார்கள் நம்பிக்கையோடு வாக்களித்தார்கள் எதிர்பார்த்தது கிடைக்காவிட்டாலும் தமது உரிமை வாழ்வு மண் பறிபோய்விடக் கூடாது என்பதற்காக வாக்களித்தார்கள் அதிகாரம் கொடுக்கப்பட்டது.
என்ன நடந்தது?
மக்களுக்கு தேவை இருக்கின்றன தம்மால் பெற்றுக்கொள்ள முடியாதவைகளை மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கின்றது.
நம்பினார்கள் வாக்களித்தார்கள் வரவேற்றார்கள் இறுதியில் பெற்றதை விட இழந்தது தான் அதிகம் தேர்தல் வருகிறது பதவியும் வருகிறது அதன் பின் தேர்தல் வராது என்று இருந்து விட்டால் அது மடத்தனம்.
மக்கள் விழித்துவிட்டார்கள் இனியும் ஏமாற ஆயத்தம் இல்லை இனியும் இழக்கக் கூடாது என்று அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
அற்பணிப்போடு மக்கள் நலம் சார்ந்து பணியாற்றுபவர்களை நம்புவோம் முன்னிருத்துவோம் எமது எதிர்காலமாவது நிம்மதி நிறைந்தாக மகிழ்ச்சி நிறைந்தாக அமையட்டும் என திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் தெரிவித்தார்.