கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர்மந்தரில் இந்த போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.
தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் நேற்று தமது உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கையில் மண்டை ஓடுகளை ஏந்தியவாறு வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
இது குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவிக்கையில், ‘எத்தனையோ போராட்டங்களை நாங்கள் நடத்திவிட்டோம். ஆனாலும் பிரதமர் மோடி எம்மை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இந்த நாட்டில் விவசாயிகள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அதனால்தான் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக்கொண்டு போராடுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமது கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையில், தமிழ்நாட்டின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கையெழுத்துப் பெற்று பிரதமர் அலுவலகத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.