ஹொங் கொங் நாட்டில் மிக வேகமாக பரவி வரும் காய்ச்சல் காரணமாக இதுவரை 320 பேர் உயிரிழந்துள்ளதாக ஹொங் கொங் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் சுகாதார பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த காய்ச்சலால் இதுவரை 456 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு பாதிக்கப்பட்டோரில் 65 வயதுக்கு மேற்பட்டோரே அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்படி காய்ச்சலால் இவ்வருடம் மே மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரை பாதிக்கப்பட்டோரில் 19 பேர் சிறு குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதி வேகமாக பரவி வரும் இந்தக் காய்ச்சல் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹொங் கொங் சுகாதார பாதுகாப்பு மையம், குறித்த காய்ச்சல் ஜூலை மாதம் நடுப்பகுதியிலேயே அதிகளவில் பரவ ஆரம்பித்ததாக குறிப்பிட்டுள்ளது.
எனினும், கடந்த மூன்று வாரங்களாக இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதே வேளை இந்தக் காய்ச்சலால் கடந்த வருடம் உயிரிழந்தோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இவ்வருடம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.