யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று கலந்துரையாடவுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கில் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்துதருமாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும் அதற்கேற்ப இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து அண்மையில் இடம்பெற்ற இளைஞர்களின் கைது சம்பவங்கள், பிராந்தியத்தின் பாதுகாப்பு சூழல், ஆவா குழுவின் செயற்பாடுகள், மக்கள் எதிர்கொண்டுள்ள அச்சமான சூழல் என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றச் செயல்களில் உண்மையாகவே தொடர்புபட்டுள்ளவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதை தாம் தடுக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.