சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன்,நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ், ஆகிய ஏழுபேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டாலும் மிகக்கொடுமையான தண்டனைகளை அவர்கள் அனுபவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘பேரறிவாளன் ஏராளமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை பரோலில் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் வாக்குறுதி அளிக்கப்பட்டது. வாக்குறுதி அளிக்கப்பட்டு ஒருமாதம் ஆகியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எனவே பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நிரந்தரமாக விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.