சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மாகாண தலைநகர் செங்டூவில் இருந்து 300 கிலோ மீற்றர் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 விநாடிகளுக்கு இந்த நிலநடுக்கம் நீடித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் பல இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் இடிபாடுகளுக்குள் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. மீட்புப்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.