எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினமும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றது.இதன்போது, 49 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 12 மீன்பிடிப் படகுகளும் இலங்கை கடற்படையிரால் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேற்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், ‘இலங்கை கடற்படை கப்பல்களால் மீனவர்களின் இரண்டு படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இதனால் 7 மீனவர்கள் கடலுக்குள் விழுந்துள்ளனர். அவர்களை கடற்படையினர் தாக்கியுள்ளனர்.
அமைதியான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இலங்கை கடற்படையினரின் இத்தகைய செயற்பாடுகள் ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளது.
தாக்குதல் நடத்தி மீனவர்களை கைது செய்திருப்பதால் இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, இராஜதந்திர அடிப்படையில் வலுவான நடவடிக்கையாக இது அமைய வேண்டும்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுடன் சேர்த்து 64 மீனவர்கள் இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக மீட்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்