வடபகுதி இளைஞர் யுவதிகள் அரச சேவைகள் தவிர்ந்த வேறு எந்த வேலைகளிலும் ஈடுபட மாட்டார்கள் அல்லது வேறு தொழில்கள் தெரியாது என்று கூறப்படுகின்றது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் , ‘யாழ் தொழில் முனைவோர் – 2017’ எனும் தொனி பொருளில், யாழ்.சங்கிலியன் பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை காலை கண்காட்சி ஆரம்பமானது.
அக் கண்காட்சியினை பிரதமன விருந்தினராக கலந்து கொண்ட முதலைச்சர் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வருடா வருடம் இவ்வாறான கண்காட்சிகளை ஒழுங்கு செய்வதால் மறைந்துள்ள முயற்சியாளர்களை அடையாளங் காணக்கூடியதாக இருக்கின்றது. தரமான உற்பத்திகளை பயன்பெறுநர்களுக்கு அறிமுகம் செய்யக்கூடியதாக இருக்கின்றது. வியாபார ஆலோசனைகள் மற்றும் துணைச் சேவைகளை வழங்குவதன் மூலம் புதிய தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திக்கான சந்தை வாய்ப்புக்களை வளப்படுத்திக் கொள்வதற்கும் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்புக்களை அறிந்து கொள்வதற்கும் அவை உறுதுணையாக இருந்து வருகின்றன.
வர்த்தகம் என்பது வெறுமனே கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் கிடைக்கப் பெறுகின்ற பொருட்களை கொள்வனவு செய்து அதனை வாடிக்கையாளர்களுக்கு இங்கு கொண்டுவந்து விற்பனை செய்வது மட்டுமல்ல. மாறாக எமது பகுதிகளில் காணப்படுகின்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்வதும் அவற்றைச் சந்தைப் படுத்துவதும் வர்த்தகத் துறையின் மிக முக்கியமான நடவடிக்கைகள் ஆவன.
நாம் மேற்கொள்ள இருக்கின்ற தொழில் முயற்சிக்கு போதிய சந்தை வாய்ப்புக்கள் இருக்கின்றனவா, தொழில் முயற்சிக்கான மூலப்பொருட்களை தடையின்றி தொடர்சியாக பெற்றுக்கொள்ள முடியுமா, உற்பத்திச் செலவீனம் எமது கட்டுப்பாட்டுக்குள் இருக்குமா, அவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் கூடுதல் சந்தை வாய்ப்பை பெறக்கூடிய வகையில் தரமானதாக இருப்பனவா போன்ற பல விடயங்களை தொழில் முயற்சியை ஆரம்பிப்பதற்கு முன்னரே எம்மால் மதிப்பீடு செய்து கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது எமது உற்பத்திகள் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு அமையுமா என்பது பற்றியும் நாம் அறிந்திருத்தல் அவசியம்.
இவையனைத்திற்கும் மேலாக வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்துகின்ற நிகழ்வு மற்றைய எல்லா நடவடிக்கைகளையும் விட முக்கியத்துவம் பெறுகின்றது. ஒரு உற்பத்திப் பொருளை அல்லது உபகரணம் ஒன்றை கொள்வனவு செய்ய வருகின்ற வாடிக்கையாளர் அது பற்றிய பல மேலதிக தரவுகளை அறிந்து கொள்ள விரும்புவர்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளரை திருப்தியடையச் செய்யும் வகையில் நீங்கள் வழங்குகின்ற தகவல்கள் உங்கள் விற்பனை நிலையத்தின்பால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும். மாறாக உங்களுடைய பொருட்கள் எவ்வளவு தரம் மிக்கதாக இருந்தபோதும் நீங்கள் வாடிக்கையாளரை திருப்திப் படுத்தாது விடின் உங்கள் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படுவன.
மிகவும் வளர்ச்சி அடைந்த முன்னணி வகிக்கின்ற வர்த்தக நிறுவனங்களின் தொழில் முயற்சியில் வாடிக்கையாளரை திருப்திப் படுத்துதல் என்ற விடயம் மிகக் கவனமாக ஆராயப்பட்டிருக்கும். இவ்வாறான நிறுவனங்களில் கடமை புரிபவர்கள் வேறு எந்தத் தவறுகளுக்கும் மன்னிக்கப்படுவார்கள். ஆனால் வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்தத் தவறின் அவரின் சேவைகள் எதுவித விளக்கமுமின்றி நிறைவுறுத்தப்படும்.
வடபகுதியில் வர்த்தக நடவடிக்கைகளின் தரத்தை தேசிய மற்றும் சர்வதேச தரத்திற்கு ஒப்பானதாக தரமுயர்த்த நீங்கள் அனைவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாகவே ஒரு கருத்து மேலோங்கி இருக்கின்றது. அதாவது வடபகுதி இளைஞர் யுவதிகள் அரச சேவைகள் தவிர்ந்த வேறு எந்த வேலைகளிலும் ஈடுபட மாட்டார்கள் அல்லது வேறு தொழில்கள் தெரியாது என்று கூடக் கூறப்படுகின்றது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். வளர்ச்சியென்பது ஓர் இரவில் ஏற்படுவதல்ல. என்ன தொழிலாக இருந்தாலும் உறுதியானதும் படிப்படியானதுமான வளர்ச்சியே நிரந்தரமானது.
வடபகுதி மக்கள் எந்தவொரு காரியத்தில் இறங்குகின்றபோதும் அல்லது எந்தவொரு பொருளை கொள்வனவு செய்கின்ற போதும் அதனைக் கவனமாக ஆராய்ந்து திருப்தி ஏற்படும் பட்சத்திலேயே அதனைச் செய்வார்கள் அல்லது கொள்வனவு செய்வார்கள்.
அவ்வாறாக ஒரு பொருளின் தரம் தீர்மானிக்கப்பட்டு விட்டால் அதன் பின்னர் அதன் விற்பனைக்கு உற்பத்தியாளர்கள் எதுவிதமான விளம்பரங்களும் மேற்கொள்ளத் தேவையில்லை. வாடிக்கையாளர்களே உங்களுக்காக விளம்பரங்களை மேற்கொள்வார்கள்.
இற்றைக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தின் தயாரிப்புக்களே முதன்மையானவை ஏனைய நாடுகளின் தயாரிப்புக்கள் தரம் குறைந்தவை என்ற கருத்து இருந்து வந்தது. பின்னர் உற்பத்திச் செலவீனம் அதிகரிக்க ஜப்பான் நாட்டுத் தயாரிப்புக்கள் முதலிடம் பெற்றன.
இன்னும் சில காலம் செல்ல தற்போது காணப்படுவது போன்று சீன உற்பத்திகள் மேலோங்கி இருக்கின்றன. வருங்காலத்தில் இந்தியாவின் தயாரிப்புக்கள் முதலிடத்தைப் பெற்றாலும் அதிசயப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இது போன்றே எமது உற்பத்திகளும் இன்றைய சந்தை நிலவரங்களுக்கு ஏற்புடையதாக அதிக தேவையுடையதாகவும் கட்டுப்படியானதாகவும் அமைகின்றபோது வர்த்தகம் மேலோங்கும். உதாரணமாக பொலித்தீன் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றீடாக பயன்படுத்தக்கூடிய உற்பத்திகளில் ஈடுபடுவதன் மூலம் விற்பனைகளைப் பெருக்கமுடியும்.
வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டிய சில விடயங்கள் உண்டு. முதலாவதாக உங்கள் முயற்சியில் முழுமனதாக நீங்கள் ஈடுபடப்பழகிக்கொள்ள வேண்டும். அடுத்து நீங்கள் உங்கள் சிந்தனைகளையும் குறிக்கோள்களையும் முன்னிலைப்படுத்தி அவை நிச்சயம் நடந்தேற அல்லும் பகலும் உழைக்க வேண்டும். சிந்தனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தான் வர்த்தகம் வளரும். வெறும் சிந்தனைகளாக மட்டும் அவை இருந்தால் அவை ஏட்டுச்சுரக்காய்களாய் ஆகிவிடுவன.
யாருக்கு எந்தப்பொருளை வழங்க வேண்டும் அல்லது வழங்கலாம் என்று முதலில் தீர்மானித்து, நீங்கள் எதைச்செய்தால் அவர்கள் உங்கள் பொருட்களை மனமுவந்து வாங்குவார்கள் என்று கணிப்பதே வர்த்தகர்களின் திறனாகவிருக்க வேண்டும். இவற்றை எங்கள் வர்த்தகர்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எனினும் சொல்லவேண்டும் என்று பட்டதால் சொன்னேன் என மேலும் தெரிவித்தார்.