இன்றைய நாள் யாழ்ப்பாணம்-கண்டி (A9) நெடுஞ்சாலை மூடப்பட்ட நாள். இந்த நிமிடமெல்லாம் ‘அடுத்து என்ன நடக்குமோ’ என்ற மனப் போராட்டத்தில் வடபகுதி மக்கள், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் பதறிய நாள்; முள்ளிவாய்க்காலுக்கு முதல் அடியை எடுத்துக்கொடுத்த நாள் என்று பல முக்கியமான கட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
கடந்த 2006ஆம் ஆண்டு இதே நாட்களில் நல்லூர் பெரும் திருவிழா ஆரம்பமாகி கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இருந்த புரிந்துணர்வு உடன்படிக்கை முறியும் தறுவாயில் மீண்டும் ஒரு போர் ஆரம்பமாகலாம் என்ற சந்தேகம் அனைவர் மனத்திலும் குடிகொண்டிருந்தபோதுதான் இது நடந்தது.
2006 ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முன்னிரவுப் பொழுது…..
37mm ஆட்லறி உந்துசெலுத்திகள் அடுத்தடுத்து பலாலிப் பக்கமாகக் இயங்கத் தொடங்கின. அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தெற்குக் கரையெங்கும் இராணுவத்தின் மோட்டார் மற்றும் பல்குழல் உந்துசெலுத்திகள் அதிரத்தொடங்கின. குடா நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
“வடபோர்முனை முகமாலை முன்னரங்கில் ஸ்ரீலங்காப் படையினர்மீது தமிழீழ விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதலை மேற்கொண்டு முன்னேறிச் செல்கின்றனர்” என்ற செய்தி புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பாகி நிகழ்வின் தன்மையை உறுதிப்படுத்தியது. உள் நாடு மற்றும் சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் இலங்கையின் வட பகுதி நோக்கித் திரும்பத்தொடங்கின.
இருள் சூழ்ந்த இராப்பொழுதில் மழையற்ற தெளிந்த வானமாகத் தோன்றினாலும் மின்னலும் இடிமுழக்கமும்போல் வெடியின் ஒளியும் ஒலியும் சேர்ந்து வான வெளியிடையில் பலத்த களேபரம் செய்துகொண்டிருந்தன! யாழ்ப்பாணக் குடா நாட்டை இலங்கைத் தீவின் பிரதான நிலத்திணிவோடு இணைக்கும் ஒரேயொரு தரைவழிப் பாதையாக இருந்த யாழ்-கண்டி நெடுஞ்சாலை இரவோடிரவாக மூடப்பட்டது.
அன்றிலிருந்து யாழ்ப்பாணத்தை ஏழரைச்சனி ஆட்டிப்படைக்கத்தொடங்கியது. அரிசி, மா, சீனி என அனைத்தினது விலைகளும் மலையேறிவிட்டன; சங்கக் கடைகளில் வரிசை வாழ்க்கை தொடங்கியது; ஊடரங்கு அமுலாகியது; வீதியெங்கும் இராணுவத்தினரின் பிரசன்னம். இதையெல்லாம் விட யாழ்ப்பாணத்தில் படுகொலைப் படலமும் ஆரம்பமாகியது. வீதிவீதியாக தினம்தோறும் பலர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். கடத்தல்களும் வெள்ளை வான் நடமாட்டங்களும் அதிகரித்தன. கிளைமோர் என்ற ரிமோட் கொன்ரோலர் வெடி அறிமுகமானது. இப்படி ஏராளம் ஏராளம் அவலங்கள்!
இந்தப் பொருள் தட்டுப்பாட்டுக்குள் அத்தனை மக்களும் முடங்கிக்கிடந்தும் பணக்காரன் ஏழை என்கிற பேதமில்லாமல் அனைவரும் வறுமையை அனுபவித்து வாழ்ந்து சீவித்தது அதிசயமே. உழவு செய்வது எவ்வளவு பெரிய உயர்ந்த காரியம் என்பதை பலரது வீட்டில் இருந்த நெல்லு மூட்டைகள் உணர்த்தின. பலநாட்கள் பல குடும்பங்களுக்கு பச்சையரிசியே கைகொடுத்தது. பெரும்பாலும் சிவப்புக் குத்தரிசி சாப்பிட்ட மக்களின் வயிற்றிற்கு பச்சையரிசி அவ்வளவு தாக்கத்தைக் கொடுக்கவில்லையாயினும் கடல் மார்க்கமாக வந்த சம்பாவும் கோறாவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
யாழ்ப்பாணத்தைப் புலிகள் கைப்பற்றிவிடுவார்கள் என்றே அந்த வேளையில் பலராலும் நம்பப்பட்டது. ஆனால் முகமாலையை உடைத்துக்கொண்டு எழுதுமட்டுவாழ் வரை முன்னேறிய புலிகளுக்கு மிருசுவில் படைத்தளத்தின் எறிகணைத்தளம் பாரிய இடைஞ்சலாகியது. அதேபோல் குடாநாட்டின் தென்மேற்கு வழியாக மண்டைதீவின் ஊடாக முன்னேறிய புலிகளின் ஈரூடக அணியினர்க்கு யாழ் நகரப் படையினர் மற்றும் பரந்த தீவுக்கூட்டங்களில் இருந்த படையினரின் எதிர்ப்பு பாரிய சவாலாகியது. இதனால் இருவழிகளிலும் முன்னேற மேற்கொண்ட முயற்சியைக் கைவிட்டு பழைய நிலைகளையே பலப்படுத்தினர்.
ஆரம்பத்தில் வன்னிப் பிரதேசத்தை யாழ்ப்பாணப் படையினரே கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. வடபோர்முனையில் முகமாலையூடாக முன்னேறி புலிகளிடம் இழந்த ஆனையிறவைக் கைப்பற்றி அதில் பாரிய பீரங்கித் தளத்தினை அமைத்துவிட்டு அதன் சூட்டாதரவோடு முன்னேறலாம் என்பது இராணுவத்தினரின் நீண்ட நாள் திட்டமாக இருந்தது.
ஆனால் முகமாலை, பளையின், ஆனையிறவு போன்ற பிரதேசங்களின் புவியியல் தரைத்தோற்றமும் புலிகளின் மிகக் கனதியான எதிர்த் தாக்குதலும் இராணுவத்தினரை முகமாலை முன்னரங்கை ஊடறுத்துச் செல்ல விடவில்லை.
முகமாலை, கிளாலி, நாகர்கோவில் போன்ற வடபோர்முனை முன்னரங்குகள் யாழ்ப்பாணக் குடா நாட்டின் புவியியல் அடிப்படையில் மிகவும் பலம்வாய்ந்த அரண்கள் என்பர். கிளாலிக்கும் பூநகரிக்கும் இடையிலுள்ள யாழ்ப்பாணப் பெரும் கடலேரியும் முகமாலைக்கும் நாகர்கோவிலுக்கும் இடையில் உள்ள தொண்டைமானாறு கடனீரேரியும் நாகர்கோவிலுக்கு கிழக்கே அமைந்துள்ள வங்கக் கடலும் இந்த பிரதேசங்களின் போரியல் தரைத் தோற்றத்தினைத் தீர்மானிக்கும் முக்கிய மையங்களாகும்.
வடபோர்முனையின் புவியியல் செல்வாக்கை நிலைப்படுத்திய புலிகள் தெற்கிலிருந்து முன்னேறிய படையினரிடமிருந்து சிறிது சிறிதாக பின்வாங்கத் தொடங்கினர். படையினர் வன்னியில் அகலக் கால் பதித்தபோதும் புலிகளால் ஊடறுப்புச் சமர் புரியமுடியாமற் போனதுதான் பல படைத்துறை ஆய்வாளர்களையும் திகைப்படைய வைத்த விடயம். பரந்த பரப்பில் அகலக்கால் பதித்தல் என்பது பதுங்கித் தாக்கும் கொரில்லா அணியினர்க்கு சாதகமானதாகவே இருக்கும்.
பரந்தனை படையினர் கைப்பற்றும்வரை முகமாலையில் நிலைகொண்டிருந்த யாழ்ப்பாணப் படையினரால் சிறிது தூரமும் முன்னேற முடியவில்லை. இறுதியில் புலிகள் தாமாகவே அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். அதன் பின்னர் பெரும் மனிதப் பேரவலங்களோடு போர் முடிவுக்கு வந்தமை வரலாறு!
– மறவன்