ராஜீவ்காந்தி கொலையாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்கள் ராபர்ட்பயாஸ். ஜெயக்குமார்.
இவர்கள், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருவதால், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிற்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது. ஆயுள்தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறையில் இருக்கவேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால், அந்த வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. இந்த அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பிற கைதிகள், விடுதலை கேட்டு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.