முல்லைத்தீவில் கோத்தபாய இராணுவ வதைமுகாமும், திருகோணமலையில் கன்சைட் இரகசிய தடுப்பு முகாமும் இயங்கியதாக சான்றுகள் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
2006ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 17ஆம் நாள் மூன்று தமிழ் மாணவர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் மாணவர்களும் இரவு 10.00 மணியளவில் அவர்கள் பயணம் செய்த வாகனத்துடன் கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்ட மாணவர்கள் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான நிசாந்த டி சில்வா விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரவிக்கையில், ஐந்து மாணவர்களும் திருகோணமலை கன்சைட் இராணுவ வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை விசாரணையின் மூலம் அறியமுடிந்தது. இங்கு பெருந்தொகையான எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் காணப்பட்டது.
அத்துடன், திருகோணமலையில் கன்சைட் இரகசிய தடுப்பு முகாமும் மற்றும் முல்லைத்தீவில் கோத்தபாய இராணுவ வதைமுகாமும் இயங்கியதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
இவ்விரு வதை முகாம்களிலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை அரச அதிகாரிகளின் சாட்சியத்தின் மூலம் முதன்முதலாக இந்த நீதிமன்றில் வெளிக்கொண்டு வருவதாக சாட்சியமளித்தார்.