வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சுற்றி சுயநல அரசியல் லாபத்திற்காக குள்ளநரிக் கூட்டமொன்று சுற்றிக்கொண்டிருப்பதாகவும், அவர்களின் சொல் கேட்டு வடமாகாண முதலமைச்சர் நடப்பாரானால் வடமாகாணம் இன்னும் பல பின்னடைவுகளையே சந்திக்கும் என வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப.டெனீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
கடந்த சில மாதங்களாக வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலையினால் வட மாகாணத்திற்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிச் செல்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு நிதி பயன்படுத்தப்படாமல் திரும்புமாயின் அதற்கான முழு பொறுப்பையும் முதலமைச்சரே ஏற்க வேண்டும்.
கடந்த காலங்களில் வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படாமல் சில அமைச்சுக்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை கிராம மட்ட அமைப்புக்களுக்கு பணமாக வழங்கிய வரலாறும் உண்டு.
இவ்வாறு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான நிதியை அமைப்புகளுக்கு பணமாக வழங்குவது என்று சொன்னால் அதனை சிறுபிள்ளை கூட கச்சிதமாக செய்து முடிக்கக்கூடிய வலுவுள்ளவர்களாக காணப்படுகிறது.
இவ்வாறு செய்வதென்று சொன்னால் இதற்கு படித்த மேதாவிகள் வட மாகாண சபைக்கு தேவையில்லை. ஆகவே கடந்த கால வரலாறுகளில் வட மாகாண சபைக்கு அதன் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் வெளியீடும் அதன் பயன்பாடும் எவ்வாறு இருந்ததென்பதை மக்களும் நன்கு அறிவீர்கள் என நம்புகின்றேன்.
அந்தவகையில் தற்பொழுது காணப்படுகின்ற இந்த அசாதாரண அரசியல் சூழ்நிலையை முதலமைச்சர் உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து நேர்த்தியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
குறிப்பாக விவசாய அமைச்சினை முதலமைச்சர் தன்னகத்தே வைத்திருக்கின்றார். அனால் தற்பொழுது அந்த அமைச்சில் பல வேலைத்திட்டங்கள் தேங்கிக் கிடப்பதாக அறியமுடிகின்றது.
ஆகவே சம்மந்தப்பட்ட அமைச்சர்களை உரிய முறையில் நியமித்து மிக விரைவாக அவ்வேலைத்திட்டங்களை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தமட்டில் கடந்த மூன்று வருடங்களில் எனது அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு ரூபா நிதி கூட திரும்பிச் செல்லவில்லை என்பதனை எமது மக்கள் நன்கு அறிவீர்கள்.
குறிப்பாக இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை அடிமட்டத்திற்கு இறங்கி அதிலிருக்கிற சாதக, பாதக விடயங்களையும் இருக்கின்ற பிரச்சினைகளையும் கண்ணுற்று அதனை தீர்ப்பதன் ஊடாகவே முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை சரியாகவும், விரைவாகவும் பிரயோசனம் உள்ளதாகவும் செய்து முடிக்க கூடியதாக இருந்தது.
திட்டங்களை வகுப்பது மட்டுமல்லாது அதனை நடைமுறைப்படுத்துகின்ற போது அடிமட்டத்திற்கு இறங்கி வேலை செய்வதில் தான் அதன் வெற்றி தங்கி இருக்கின்றது.
தற்பொழுது பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் முதலமைச்சர், அவரது வயது உடல்நிலை காரணமாக அடிமட்ட கிராமங்களுக்கு இறங்கி செயற்படுவது என்பது முடியாத காரியம்.
ஆகவே மிக விரைவாக உரிய அமைச்சர்களை நியமித்து மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை சரியாக பயன்படுத்துவதன் மூலமே எமது மக்களின் வாழ்வாதாரத்தினை ஓரளவுக்கேனும் உயர்த்த முடியும்.
தூரநோக்கோடு சிந்தித்து முதலமைச்சர் செயற்படுவார்களாயின் அதனை முழுமனதோடு நான் வரவேற்கின்றேன். மேலும், தற்பொழுது ஏற்பட்டிருகின்ற அரசியல் அசாதாரண நிலையினை பயன்படுத்தி பலரும் தங்களது சுயலாப அரசியலை முன்னெடுக்க முனைவதனை முதலமைச்சராகிய தாங்களும் நன்கு அறிவீர்களென நம்புகின்றேன்.
ஆகவே எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய வகையிலும் அபிவிருத்திகளை துரித கதியில் கொண்டு செல்வதற்கும் எமது மக்களுக்கான அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்குமான தூர நோக்கோடு சிந்திப்பதற்கு நாம் எல்லோரும் கடமைப்பட்டுள்ளோம்.
எனவே பதவி ஆசை மற்றும் சுயநல அரசியலுக்குள் நாம் விழுந்து விடாது மக்களின் நலனே முக்கியமென செயற்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
அதேநேரம் கடந்த காலங்களில் அதிகாரிகள் உட்பட அனைவரும் நிதி திரும்பிச் செல்லவில்லை என்று நாங்கள் மறுதலித்திருந்த போதும் அது எமது மாகாணத்திற்கு நிதி வந்து திரும்பிச் செல்வதென்று அர்த்தமில்லை.
குறித்த வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியானது அந்த வருடத்திற்குள் பயன்படுத்தப்படாவிடில் அடுத்த வருடம் ஒதுக்கப்படும் நிதியிலிருந்துதான் குறித்த வேலைத்திட்டத்தினை நிறைவு செய்ய முடியும்.
அவ்வாறு நிதி கடந்த வருட திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் போது புதிய செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.
எனவே, குறித்த காலப்பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி அக்காலப்பகுதியிலே பயன்படுத்தப்படுமானால் புதிய திட்டங்கள் வருகின்ற காலங்களில் சாத்தியமாக்கப்படும்.
நிதி திரும்பிச் செல்லாது என்ற வீண் விவாதங்களை நிறுத்தி யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக எமது மாகாணத்திற்கு ஒதுக்கப்படும் நிதி போதாதென்றும் மத்திய அரசு எமக்கு நிதியினை ஒதுக்கித் தருவதில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளோம்.
ஆனால் தரப்பட்ட நிதிகள் சரியாக ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா? அதனை முற்றுமுழுதாக பயன்படுத்தி இருக்கின்றோமா? என நாமே நமது மனச்சாட்சியை தொட்டு கேட்க கடமைப்பட்டுள்ளோம்.
கடந்த கால தவறுகள் எவ்வாறு இருப்பினும் எதிர்காலத்தில் எமது மாகாணத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு முதலமைச்சராகிய நீங்கள் தீர்க்கமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.
மேலும், முதலமைச்சராகிய தங்களைச் சுற்றி ஒரு குள்ளநரிக் கூட்டம் சுயநல அரசியல் லாபத்திற்காக வட்டமிட்டுக் கொண்டிருகின்றார்கள். அவர்களின் சொல்கேட்டு நீங்கள் நடப்பீர்களெனில் இன்னும் எமது மாகாணம் பல பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.
அத்தோடு ஒரு விடயத்தை சரியாக சிந்தித்து செயற்படுத்த கூடிய அறிவு, ஆற்றல், வல்லமை உடையவர் தாங்கள். அந்தவகையில் எவரதும் சுயநல அரசியல் லாபத்திக்கும் இடம்கொடுக்காது சரியான விடயங்களை நேர்த்தியாக முன்னெடுப்பீர்களென நம்புகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.