மாண்டி-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் சுமார் 800 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் அவற்றில் சுமார் 50க்கு மேற்பட்ட பயணிகள் இருந்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந்த திடீர் நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தொடர்மழையால் மீட்பு பணிகள் தாமதமாகின. இன்று பிற்பகல் வரை நிலச்சரிவில் சிக்கி பலியான 15 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதற்கிடையே, மாநில முதல்-மந்திரி வீரபத்ர சிங் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மாநில அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என தெரிவித்தார். இந்த கோரச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாண்டி நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாண்டி துணை கமிஷனர் சந்தீப் காதம் கூறுகையில், ’’நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் பலியாகியுள்ளனர். அவர்களை மீட்க மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 46 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் உதவியுடன் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது’’ என தெரிவித்துள்ளார்.