அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகி தனித்து ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சிஆலோசித்து வருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மைக்காலமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சியை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. கூட்டு எதிரணியின் தூண்டுதலினால் இவ்வாறு நடப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம்கொண்டுள்ளது.
இருப்பினும் இக்குழப்பம் தொடர்பாக ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்தாலோசித்துள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டாட்சி அமைத்தாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை தாக்கி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐதேக தொடர்ந்து கூட்டணி வைத்துக் கொண்டால், தாம் பதவி விலகுவோம் என்று ஐதேக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சிலர், எச்சரித்துள்ளனர் என்றும் அறியப்படுகிறது.
இந்த நிலையிலேயே, டிசெம்பர் 31ஆம் நாளுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அமைத்த கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, தனித்து ஆட்சியமைப்பது குறித்து ஐதேக ஆலோசித்து வருகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.