யாழில் இசை நிகழ்ச்சி நடத்த வந்த பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஷ்ணனுக்கு எதிராக ஈபிடிபி கட்சியினரால் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன், பாடகர் உன்னிக்கிருஷ்ணன் டக்ளஸ் தேவானந்தாவிடம் மன்னிப்புக் கோரும்படியும் அச்சுறுத்தப்பட்டமையினால் குறித்த இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த இசை நிகழ்ச்சி நேற்று மாலை திருகோணமலை கலாச்சாரா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்களுக்கு குறித்த சம்பவம் தொடர்பாக பாடகர் உன்னிக் கிருஷ்ணன் விபரிக்கையில்,
“யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். இந்தியத் தூதரகம் மூலமே அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அறிந்தேன். அதில் நான் ஒரு கலைஞன் என்ற அடிப்படையிலேயே கலந்துகொண்டேன். அப்போது ஒருவர் எனக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்திருந்தார். அவர் யார் என்று முன்னர் எனக்குத் தெரியாது.
“பின்னர் தான் நிகழ்வின் இறுதியில், பொன்னாடை போர்த்தியது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்று அறிந்துகொண்டேன்.
“அந்த நிகழ்வுக்காக எனது நண்பரான கர்நாடக இசைக்கலைஞர் ஜெய கிருஸ்ணா தொடர்புகொண்டு கேட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில நாங்கள் ஒரு விழா நடத்துகின்றோம். நீங்கள் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.
“அவர் பிரபல்யமான கலைஞர் என்ற வகையில் அங்கிருக்கின்ற எமது யாழ்ப்பாணத் தமிழ் ரசிகர்களுக்கு இசைநிகழ்சியை நடத்தலாம் என வந்தேன். அதுவே எனது ஒரேயொரு நோக்கமாகும்.
“யாழ்ப்பாணம் வருவதற்கான எல்லா ஆயத்தங்களும் முடிந்த நிலையில், இந்திய அரசாங்கத்துக்கும் உறுதியளித்த பின்னர்தான், தமிழ் நாட்டில் பலர் அங்கு செல்ல வேண்டாம் என்றனர். ஆனால், சகல ஏற்பாடுகளும் நடந்தாயிற்று. இந்திய அரசாங்கத்துக்கு வழங்கிய உத்தரவாதத்தையும் தவிர்க்கமுடியாத சூழலில் நான் இங்கு வந்து பங்குபற்றினேன்.
“ஆனால், எந்த அரசியல்வாதியையும் பங்கு பற்ற வைக்காதீர்கள் என்று நான் முன்னரே கூறியிருந்தேன்.அதற்கு உறுதியளித்ததனால், இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்ததன் அடிப்படையிலேயே அந்நிகழ்வுக்கு வந்து சென்றேன்.
“எனினும், இதற்குப் பின்னால் இருந்த அரசியல்கள் எனக்குப் புரிந்திருக்கவில்லை. நான் ஒரு குற்றமற்ற இசைக்கலைஞன்.
“இதன்பின்னர், தமிழ் நாட்டிலும் பல தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பல விமர்சனங்கள் ஏற்பட்டன. பின்னர் நான், கனடாவில் நடந்த நிகழ்வுக்குச் சென்றபோதும் அங்கு எதிர்ப்பு ஏற்பட்டது. அப்போதும் எனது நிலமையைக் கூறி நான் மன்னிப்பும் கோரியிருந்தேன்.
“ஆகவே, இதற்கு நான் எந்தவகையிலும் பொறுப்பல்ல. எனக்கு இதற்கு பின்னுள்ள அரசியல் உண்மையாகவே புரியாது; தெரியவே தெரியாது. ஆனால், அதைக் காரணமாக வைத்து, தற்போதைய யாழ்ப்பாண நிகழ்வும் நடத்தமுடியாமல் போய்விட்டது”