டோக்லாம் எல்லை பிரச்சினை இன்னமும் தீரவில்லை. அதைத் தீர்க்க இந்தியா மற்றும் சீனா இராணுவ தரப்புகள் எடுத்த எல்லா இராஜதந்திர முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. இதனால் டோக்லாம் பகுதியில் நிலவும் போர்ப் பதற்றம் குறையவில்லை.
இந்த நிலையில் லடாக் பகுதியில் மனிதர்கள் இல்லாத நிலப்பகுதியில் சீனா பாலம் அமைக்க, நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் அது உண்மையில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இருந்த போதிலும் டோக்லாம், லடாக், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட எல்லா எல்லையோர பகுதிகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்திய இராணுவம் எப்போதும் விழிப்போடு இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் சீனாவுக்கு லடாக் மட்டும் நோக்கமில்லை. சிக்கிம் எல்லைப் பகுதியும் சீனாவின் இலக்குதான்.
எனவே உச்சபட்ச எச்சரிக்கை நமது இராணுவ வீரர்களுக்கு, உளவுத்துறை கொடுத்த தகவல்களின் அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தன.
இந்த நிலையில், நேற்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
டோக்லாம் எல்லையில் ஓர் அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இந்தியாவின் வாதம், கோரிக்கை ஏற்கக்கூடியது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் சீனாவும் ஒரே நேரத்தில் எல்லைப் பிரச்சினையை தீர்க்க முடிவெடுக்க வேண்டும், இரு நாடும் யார் முதலில் படைகளை வாபஸ் பெறுவது என்று போட்டிபோட்டால் போர்ப் பதற்றம் நீடிக்கத்தான் செய்யும் என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.
இந்தியா- ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சி! சீனா- பாகிஸ்தான் அச்சுறுத்தலுக்கு பதிலடி!
நாட்டின் எல்லையோரம் தினமும் பாகிஸ்தானும் சீனாவும் இராணுவ தொல்லை கொடுத்து போர் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இரண்டு நாடுகளையும் சமாளிக்க, ரஷ்ய நாட்டு இராணுவத்துடன் கூட்டு இராணுவப் பயிற்சி மேற்கொள்ளவுள்ளது.
இந்த கூட்டுப் பயிற்சி வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. அதில் இந்தியாவின் முப்படைகளும் ஆயுத பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதனால் இப்போதே அதற்கான ஏற்பாடுகளை இருநாட்டு இராணுவமும் மேற்கொண்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக சீனா மூலம் சிக்கிம் எல்லையிலும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்திய இராணுவம், ரஷ்யாவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்தது. இதற்கு ரஷ்யாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து 2 நாடுகளின் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவை இணைந்து அக்டோபர் மாதம் 19ம் தேதி முதல் 10 நாட்கள் மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த பயிற்சி ரஷியாவின் மலைப்பகுதியான விளாடிவோஸ்டாக் உள்பட 3 பகுதிகளில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பயிற்சியில் இந்தியாவின் முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் உள்பட 350 பேர் கலந்து கொள்கின்றனர்.
பயிற்சியின்போது, உண்மையில் போர் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வது, வியூகம் அமைத்து தாக்குதல் நடத்துவது ஆகியவை குறித்த ஒத்திகைகள் தத்ரூபமாக நடத்தி காட்டப்படும் என்று இந்திய இராணுவ வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்திய இராணுவத்தின் முப்படைகளும் அன்னிய நாட்டுடன் ஒரே நேரத்தில் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல ரஷ்யாவுக்கும் இது முதல் முறை. பிரதமர் மோடி ஜூன் மாதம் மேற்கொண்டிருந்த ரஷ்ய சுற்றுப்பயணத்தின் போது, இரு நாடுகளும் இராணுவ நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன. அதன் படி முப்படை கூட்டு இராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.