வீரத்தின் நிறம்
என் தேசத்தின்
கச்சைகள் உரியப்பட்டு
மார்பில் ஈட்டியேறிய கணம்
காலப்பெருவெளியில் பீச்சியடிக்கப்பட்டதன் நிறம்
யாதாகவிருக்கும்..?
நிராசையுற்ற ஒரு முட்டையின்
சிதைந்துபோன
அழுகையின் கண்ணீர்
கால்வழி கசிந்து காய்ந்துபோனதன்
நிறம்..?
என்னை நீயும்
உன்னைநானும் உடலளவில்
அறியமுற்பட்டநாளில்
பிரடி மயிர் திருகி
கழுத்தில் பதித்த உதட்டுத் தைத்தலின்
நிறம்..?
கார்த்திகையின் கனத்த மழைநாளில்
பூத்துக்கிடக்குமே
எம் புண்ணியர் வாழ்ந்த நிலம்;
பெருங்காட்டு மலர்களால்
அதன் நிறம்..?
என் பெண்ணே!!
வீரத்தின் கடைசிநாளில்
ஒரு துரோகம் எம்மை
விலைக்கு விற்றபின்
வீழ்ந்துபோனானே உன் கணவன்
அவன் வீரத்தின் நிறம்..?
காதலின் திருவிழா நாளில்
அணைத்தும் அணைக்காமலும்
ஒரு அதீத நெருக்கம்
ஆட்கொள்கையில்
உன் நெற்றியில் சூட்டிய
சிந்தூரத்தின் நிறம்….?
என் பெண்ணே…!
உன்னிலும் உன்னை சூழவும்
அத்தனை நிறமும்
அதே நிறம்தான் எம் வீரப்புலிக்கொடி
ஏற்ற நிறம்
வீரத்தின் நிறமடி சிகப்பு
அறியாமையின் கழுத்தை
அக்கினிபார்வைமூலம் அரி
விதவையெனும் சொல்லில்
பற்றிப்பிடிக்கட்டும் அந்நிறம்
வீதியில் இறங்கிவா !!
வீரப் பெண்ணே!!
கால்களில் சிலம்பும்..,
செந்நிற ஆடையும்..,
மறவாதே ..!
இன்னும் எரியாமல் சில
அசுத்த மாநகரங்கள் மீதமுள்ளன.
அனாதியன்