மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவும் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவிடமும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைகளை நடத்தவுள்ளன. அதேபோன்று நாளை (புதன்கிழமை) மஹிந்தவின் இரண்டாவது மகனான யோஷித்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தவுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் படுகொலை விவகாரம் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் யோஷித்த ராஜபக்ஷவிடம் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. வஸீம் தாஜூதீனின் படுகொலையின் போது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜீப் வண்டி தொடர்பில் பிரத்தியேக விசாரணை இடம்பெறுகின்ற நிலையில் மேற்படி இருவரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் இன்றைய தினம் ஷிரந்தி ராஜபக்ஷவிடமும் நாளை யோஷித்த ராஜபக்ஷவிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை சீனாவிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டதாக கூறப்படும் சுப்ரிட் செட் 1 செயற்கைக் கோள் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய நிதி விவகாரங்கள் குறித்தும் ரோஹித்த ராஜபக்ஷவிடம் இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும் அறியமுடிகின்றது