நாம் மட்டும் ஏன் இப்பிடி…?
வானத்தின் விழிகளில்
தமிழனால் நனைந்த
குருதி சிதறல்கள் பட்டு
சிதறிக்கொண்டிருந்தன
தானைத்தலைவன் வழி
நின்றவர் சாவுகளை கண்டு
மாத்திரை இல்லா பிணியாக
துயருடன் குருதி துளிகள்
பல்லரசுகளின் போர் முடக்க
அரனான வல்லவர் உடல்
தொட்ட மண் துகள் அழுகிறது
பார்வைக்கு வலுவற்ற
நிர்வாண மேனியராக்கப்பட்ட
காரத்திகை மலர்களாய்
வீழ்ந்தவர் விதையாக தன்னில்
உரமில்லை என்று
தாய் மண்ணை சுற்றி சுழன்றடித்த புயல் கூட
கனிந்த தென்றலாகி
சாமரசம் வீசுகிறது
வீணர்கள் வீழ்த்திய
வலியோடு மண்ணுக்குள்
உறங்குகின்ற வீரர் துயில் கலைந்து போகாது
நின்மதி கொள்வதற்கு
குற்றுயிராய் தவிக்கிறது
என் தேச தீ பிளம்பு
வஞ்சித்து கொன்ற
உலக வல்லூறுகளை,
பிஞ்சுகளைத் தின்ற
சிங்கத்தின் கூலிகளை
துவம்சித்து தின்ன
கரு உதயம் எப்போ என்று?
பூக்கள் மட்டும் வாடாமல்
காத்திருக்கின்றன
தாம் வாடி விட்டால்
கண்மணியை காத்திட
இமையாகி மடிந்த வேங்கைகள் பாதங்களின்
வீர தர்சனம் கிட்டாது மண்ணுக்குள் சருகாகி
தாம் சிதைந்திடும் ஐயத்தோடு
ஓயாத அலைகள் மீண்டும்
உயர எழ முயல்கிறது
முள்ளி வாய்க்கால் மண்ணில்
மூடப்பட்டு மறைக்கப்பட்டு
கிடக்கும் உண்மையின்
தர்சனங்களை நீர் கொண்டு
கழுவி தடை நீக்கி
வெளியில் கொண்டு வருவதற்கு
ஆனால் நாம் மட்டும் பகட்டு
வாழ்வுக்குள்ளும் சில்மிஷம்
பண்ணும் சிற்றின்ப உணர்வுகளுக்குள்ளும்
மரணம் வரினும் பச்சோந்தித்தனமற்ற
தமிழன் வீரத்தை மறந்த துரோகத்தனத்துக்குள்ளும்
மடிந்தொழிந்து கொண்டிருக்கிறோம்…
– கவிமகன்.இ