நடத்தி முடிக்கப்பட்ட அன்புத்தம்பியின் சாவினை மனசு ஏற்க மறுத்தாலும், தொடர்ந்து அதை நினைத்து கொண்டு வாழ முடியாது என்ற உண்மை நிலையோடு நான் அடுத்த பணிக்காக தயாராகினேன். அவனது இறுதி நிகழ்வுகள் முடித்த போது காயப்பட்டிருந்த இளையவன் உடல் தேறி இருந்தான். ஆனால் அவனது கையை மட்டும் மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவன் ஒரு கரம் இல்லாதே இன்றும் வாழ்கிறான். என்ன செய்வது? திரும்பும் இடமெங்கும் மகிழ்ச்சியும் சந்தோசமும் பொங்கித்திரிந்த எமது தேசம் அடிக்கடி சிங்கள தேசத்து வன்பறிப்பாளர்களின் கோரத்தனமான தாக்குதல்களால் புண் பட்டுக்கொண்டிருந்தது. வெடிச்சத்தங்களுக்கு ஒய்வு கிடைக்கவில்லை. ஓரிடத்தில் நிலையாக தங்கி இருக்க முடியவில்லை. ஒற்றைத் தறப்பாள் கொட்டிலை ஐந்து அல்லது பத்து நாட்களுக்கு மேல் ஓரிடத்தில் போட்டுக்கொண்டு வாழ முடியவில்லை. எம் மக்கள் மாறி மாறி நடந்து கொண்டே இருந்தார்கள். மன்னாரில் இருந்து பாரவூர்தியில் ஏற்றி வந்த உடமைகள் ஒற்றை துவிச்சக்கர வண்டியில் கொண்டு செல்லும் அளவுக்கு குறைந்திருந்தது. மக்கள் நடைப்பிணமாகவே வாழத்தொடங்கி இருந்தார்கள்.
இவ்வாறான ஒரு நாளில் தான் நித்திரையின் உச்சத்தில் இருந்த போது வான் தாக்குதலுக்காக வானூர்திகள் வந்து கொண்டிருப்பதை வான் பாதுகாப்பு கண்காணிப்பு பிரிவு உறுதிப்படுத்துகிறது. எமக்கும் அதற்கான சமிக்கை கிடைக்கிறது. ஆனால் நித்திரை இன்மையால் சிவந்து கிடந்த கண்கள் எம்மை பாதுகாப்பு நிலைக்கு செல்ல விடவில்லை. மறுபக்கம் திரும்பி படுத்து கொண்டோம். திடீர் என்று ஒருவன் வந்து எம்மை எழுப்புகிறான். களமுனையில் இருந்து பின்தள வேலைக்காக வந்திருந்தான் அவன்.
அவனை கண்டதும் கொஞ்சம் மகிழ்ச்சி நித்திரையை விட்டு எழுந்தோம். என்ன மச்சான் லைன்ல நடக்குது ? அவன் களமுனை தகவல்களை எம்மோடு பரிமாறிக் கொள்கிறான். “ மச்சான் எங்களுக்கு செல் சப்போர்ட் காணாம இருக்கு மச்சான்.” தீச்சுவாலை சண்டைக்கு நாம் அடிச்ச செல்லின் பத்துவீதம் கூட இப்ப அடிக்கிறதில்லை. அதே மாதிரி கொஞ்சம் என்றாலும் மணியண்ணை ஆக்கள் தந்தால் ஆமி கிட்டயும் வரமாட்டன்.
உண்மை தான்டா எங்கட செல் பவர் அவன விட அதிகமா இருந்த காலத்தில் எம்மை எதிர்கொள்ள எதிரி பயந்து கிடந்தான். சண்டை வலுவின் உச்சத்தில் நாம் இருந்த போது எம்மீது பயம் இருந்தது. அனைத்து வளங்களாலும் முன்னிலை பெற்ற விடுதலை அமைப்பாக, சிறந்த நிர்வாக கட்டமைப்புக்களை சரவதேச நிலைக்கு உருவாக்கி இருந்ததை சர்வதேசமும் பார்த்து கொண்டிருக்க முடியாது தவித்தது. அதனால் தான் சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் கொண்டுவரப்பட்டு “சமாதானம்” என்ற போலி எம் மீது திணிக்கப்பட்டது. இதுவே எமது படை பலத்தை அளவிடவும் இன்றைய நிலைக்கு எம்மை தள்ளவும் சாதகமாக இருந்தது.
உண்மை தான். மச்சான் ஆனால் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளவேணும். எங்களுக்கு மூலப்பொருட்கள் இருந்தால் நாம் பலமுள்ளவர்கள் என்பது நியம். நேற்று நடந்த சம்பவம் அறிஞ்சனியா எங்களிடம் எதிரியை திணறடிக்கும் வெடி பொருட்கள் இல்லை என்பது எவ்வளவு நியமோ அவ்வளவு நியம் எம் வெடிபொருளாக்க பகுதியால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் அவனை திணறடிப்பது. நேற்று இரவு எங்கட ஆக்கள் புத்துவெட்டுவான் பக்கத்தில இருந்து கொக்காவில் நோக்கி வர முயன்ற ஆமிக்கு நல்லா குடுத்தவங்கள். அந்த சண்டையில செல் கேட்ட போது எங்கட ஆக்கள் சண்டியனை தான் அனுப்பினவங்கள் (சண்டியன் என்பது விடுதலைப்புலிகளின் வெடிபொருளாக்கல் பகுதியால் உருவாக்கப்பட்ட அதீத ஒலியை உருவாக்கும் பொறிமுறை கொண்ட எறிகணை)
அனுப்பின இரண்டு சண்டியன் வெடிக்கவில்லை. வெடிக்காத செல்லுக்கு கிட்டவா கொஞ்ச ஆமி கூடி இருந்தாங்கள். எங்கட ஆக்கள் அந்த இலக்குக்கு அடுத்த சண்டியனை அனுப்ப அது சரியான இலக்கில் சென்று வெடிச்சது. இதுல கொடுமை என்ன என்றால் ஏற்கனவே வெடிக்காமல் கிடந்த இரண்டும் செல்லும் இந்த வெடிப்பின் அதிர்வில் ஒன்றாக வெடித்தது. இந்த வெடிப்பு கூடி இருந்த ஆமிக்கு செவிப்பறையை வெடிக்க வைத்தது. அதிலேயே பத்து பதினைஞ்சு ஆமி காதுக்கால இரத்தம் வந்த நிலையில் முடிஞ்சிட்டான். அந்த செல்லுக்கு பிறகு அவன் கொஞ்சம் பின்னுக்கு போயிட்டானடா. இப்ப திரும்ப முட்டுப்படுகிறான். பார்ப்பம் எங்கள் உயிர் உள்ளவரை போராடுவம்…
அவன் சண்டை களத்தை பற்றி கதைத்து கொண்டிருந்த போது அதிகாலை 7.30 மணி இருக்கும் திடீர் என்று வானம் அதிர்ந்தது. மச்சான் கிபிர்… எழும்புடா பங்கருக்க போவம். படுக்கையை விட்டு எழுந்து வெளியில் வருகிறோம். எம் தலைக்கு மேலால் பதிந்து வந்து குண்டை வீசிய போது பரந்தன் பக்கத்தில் இருந்து குண்டு வெடிப்பின் அதிர்வு எழுந்தது. மச்சான் எங்கடா இது ? அருகில் இருந்தவனை வினவுகிறேன். பரந்தன் பக்கம் போல இருக்கு. அதுக்க எங்கட ஆக்கள் நிறைய இடத்தில இருக்கிறாங்கள் யாருக்கு அடிச்சானோ தெரியல்ல…? மனம் பதட்டமடைய தொடங்கியது. அவன் தனது வோக்கியை ஓடவிட்டு (வேறு இலக்கங்களை தேடுகிறான்) இது தொடர்பான செய்திகள் பரிமாறப்படுகின்றனவா என்ற பார்க்கிறான். நாங்கள் வானத்தையே வெறித்து பார்த்தபடி நிற்கிறோம். எதுவும் செய்ய முடியாத நிலை வெறுப்பின் உச்சத்தில் அருகில் நின்ற தேக்கம் மரத்தில் ஓங்கி குத்துகிறான் நண்பன். சீ என்ன வாழ்க்கையடா…? எங்கட இடத்துக்க வந்து இப்பிடி செய்திட்டு போறான் எங்களால எதுவுமே செய்ய முடியாதா? வினாவை கேட்டு பதிலையும் தானே சொல்கிறான். அண்ண விடமாட்டார். இவனுக்கு ஏதாவது செய்வார். செய்ய வேணும் செய்வம்…
சிறிது நேர தாண்டவத்தின் பின் வானூர்திகள் சென்றுவிட நாங்கள் பரந்தனை நோக்கி செல்கின்றோம். எம்மை நோக்கி பல வாகனங்கள் அவசர ஒலியை எழுப்பியபடி வருகிறது. மச்சான் காயங்கள் வருகுது வேகமா போடா என்கிறான் நண்பன். நானும் என்னால் முடிந்தளவு வேகத்தில் பரந்தனுக்கு செல்கிறேன். பரந்தன் சந்தியில் இருந்து பூநகரி நோக்கிய பிரதான வீதியில் இருந்து மக்கள் ஓடி வந்ததை கண்டு அதற்குள் தான் தாக்குதல் நடந்தது என்பதை உறுதிப்படுத்தி கொண்டு சென்ற போது ஆரம்ப பாடசாலை ஒன்றின் மீதே அந்த தாக்குதல் நடந்திருந்ததை காண முடிந்தது. பள்ளி பிள்ளைகளின் அவல ஓலம் அந்த இடத்தை அழவைக்கிறது.
அருகில் நின்ற ஒரு அரசியல்துறை போராளியிடம் “ என்ன ஆச்சு அண்ண? பள்ளிக்கூடத்துக்கு அடிச்சிட்டானடாப்பா பாவங்கள் சின்ன பிள்ளையள் கனக்க காயம். ஏழெட்டு பேர் சாவு எல்லாரையும் கிளிநொச்சிக்கு கொண்டு போனாச்சு. அவன் விரக்தியின் உச்சத்தில் இருப்பதை புரிந்து கொண்டேன். இவங்களுக்கு சரியான பாடம் புகட்டோணும். சிங்கள நாயள அடிச்சே கொல்ல வேணும். இருந்து பார் தம்பி அண்ண இதுக்கு பதில் சொல்லுவார் அவர் விடமாட்டார். தனது கண்முன்னே சாவடைந்த குழந்தைகளை எவ்வாறு அவனால் மறக்க முடியும்? எந்த தலைமுறைக்காக தனது உயிரையும் கொடுக்க தயாராக போராளி ஆகினானோ அந்த தலைமுறை கண்ணுக்கு முன்னால் சிதைந்து போவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அவன் விழிகள் கோவத்தில் சிவந்து கிடந்தன.
அவனைத் தாண்டி நானும் நண்பனும் பள்ளிக்குள்ளே சென்றோம். அங்கே இறந்து கிடந்த சிறியவர்களை கட்டி அழுது கொண்டிருந்த பெற்றவர்கள் உறவுகளை பார்க்க முடியவில்லை. கடும் வேதனையாக இருந்தது. ஆரம்ப பள்ளியில் கற்றுக் கொண்டிருந்த இந்த பாலகர்கள் என்ன செய்தார்கள்? ஏன் நாம் சாகடிக்கப்படுகிறோம் என்பதை கூட புரியாத வயது. எதையும் தெரியாமலே அவர்கள் சிதறிக் கிடந்த கோலம் தாங்க முடியாத வேதனையை தந்தது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களா? இந்த பிஞ்சு வயசில் எதற்கு இந்த தண்டனை…? மனம் சிந்தித்து கொண்டிருக்க, மச்சான் வா போவம் இங்க நின்று என்ன செய்யுறது? இதுகளை பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடியாது வா போவம் என்கிறான் என் நண்பன். சாவடைந்த குழந்தைகளை தூக்கி கொண்டு உறவுகள் செல்கிறார்கள். அந்த காட்சி மனசை சுக்குநூறாக உடைத்தெறிகிறது. கொஞ்ச நேரத்துக்கு முன் தான் பள்ளிக்கு படிக்க என்று இவர்கள் தாய் மடியில் இருந்து உணவு அருந்தி இருப்பார்கள். தந்தைக்கு அன்பாக முத்தம் கொடுத்து கை அசைத்து விடை பெற்றிருப்பார்கள். அழகாக தலைவாரி பவுடர் பூசி தன் குழந்தையை அந்த தாய் வழியனுப்பி இருப்பாள். அக்காவும் அண்ணாவும் தங்கையும் தம்பியுமாக நண்பியோடு பயணித்து வந்திருப்பார்கள். ஆனால் இப்போது பிய்த்தெறியப்பட்டு இரத்த சகதியில் கிடக்கிறார்கள். பூத்த பூவை புடுங்கி எடுத்து சாகவைப்பதை போல சிறு நேரத்துக்கு முன் மகிழ்வாக பள்ளிக்கு வந்தவர்கள் உயிரை பறித்தெடுத்தது சிங்கள வல்லாதிக்கம்.
எம்மினம் எத்தனை வலிகளை சுமப்பது? எதையும் செய்ய முடியாதவர்களாக பரந்தன் ஆரம்ப பள்ளியில் இருந்து நாம் செல்கிறோம்.
பச்சிளம் பாலகர்களை கொன்று குவித்த இந்த சிங்களம் சிறு நேரத்தின் பின் “ தமது வான்படையால் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் விடுதலைப்புலிகளின் தளம் ஒன்று முற்றாக அழிக்கப்பட்டதாகவும் ஆறு போராளிகள் கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியிடுகிறது. வானொலியினை கேட்க முடியவில்லை நிறுத்தி விடுகிறேன். நடாத்திக் கொண்டிருந்த இனவழிப்பு செய்திகளை இருட்டடிப்பு செய்து பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி நின்றது சிங்கள பேரினவாத அரசு. இதை மேற்குலகமும் நம்பிக்கொண்டிருந்தது. ஐ/நா கூட நடந்து கொண்டிருப்பது இனவழிப்பு என்பதை ஏன் உணர்ந்து தடுக்க முற்படவில்லை என்ற கோவம் மனதில் எட்டிப்பார்த்தது.
ஆனால் இந்த மேற்குலகத்தினதும் அண்டை நாடுகளினதும் நிகழ்ச்சி நிரலில் நடத்தப்பட்டு கொண்டிருப்பதே எம் மீதான இனவழிப்பு நடவடிக்கை என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன். இவ்வாறு தான் அன்றும் அறிவிச்சவங்கள். “வள்ளிபுனம் பகுதியில் பெண் போராளிகளின் பயிற்சிமுகாம் மீது வான்படை தாக்குதல் 100 க்கும் மேற்பட்ட பெண் புலிகள் பலி ” இவ்வாறான செய்தியை அரச ஊடகங்கள் பரப்பிக் கொண்டிருக்க 54 மாணவிகளின் சிதறிய உடல்களை சேகரித்துக் கொண்டிருந்தோம் நாம். இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த அந்த கொடுமையான சம்பவம் என் கண்முன்னே வந்தது. “13.08.2006 மாலை அடுத்தநாள் கணணி தொடர்பான பயிற்சி வகுப்பு ஒன்றுக்கான தயார்படுத்தலுக்காக செஞ்சோலை வளாகத்துக்கு ஒருவரோடு சென்றிருந்தேன். எங்களுக்கு குளிக்கிற தண்ணி தான் அண்ண பிரச்சனையாக இருக்கு மற்றும் படி எல்லாம் சிறப்பா இருக்கு அதை மட்டும் கொஞ்சம் சரிப்படுத்துங்க அண்ணா.” முதலுதவி பயிற்சி ஏற்பாட்டாளருக்கு செஞ்சோலை வளாகத்தில் தங்கி இருந்த மாணவிகள் கூறினார்கள். அவர்கள் சந்தோசமாகத் தான் இருந்தார்கள். வீட்டை விட்டு பிரிந்து வந்து பத்து பதினைந்து நாட்கள் நிற்க போகிறோமே என்ற வருத்தம் இருக்கவில்லை.
குதூகலத்தோடு தான் சந்தோசமாக இருந்தார்கள். அவர்கள் தமது முதலுதவி பயிற்சியின் மூலம் எம் மக்களுக்கு உடனடி உதவிகளை செய்து சாவின் வீதத்தை குறைக்கலாம் என்று நம்பி இருந்தார்கள். படிப்பும் செய்முறை வகுப்புக்களும் என்று இருந்த அவர்கள் மீது அடுத்தநாள் அதிகாலை சிங்கள பேரினவாதம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடாத்துவார்கள் என்று யாரும் நினைக்கவில்லை.
இன்றைய நாளைப்போலவே அதிகாலை 7 மணி அன்றைய முதலுதவி பயிற்சிக்காக தயாராகி கொண்டிருந்தார்கள். நித்திரை விட்டு உற்சாகமாக எழுந்து தேநீர் குடிக்க ஓடினார்கள் சிலர் காலைக்கடன்கள் முடிக்க ஓடினார்கள் மற்றவர்கள். எல்லாருமே அன்றைய நாளுக்கான ஆரம்பத்தை உற்சாகமாக தொடங்கி இருந்தார்கள். இரவு உறக்கம் களைந்து எழுந்திருந்த எம் இனத்தின் தலைமுறை தாங்கிகள் மீது இதே வானூர்திகள் தானே தாக்குதல்களை செய்து நிரந்தரமாக உறங்க வைத்தன. என் விழிகள் அன்றைய காட்சியை நினைத்து கரையத் தொடங்கின. அந்த நினைவுகள் அழுகையை கட்டுப்படுத்த முடியாத ரணமானவை.
முதல் நாள் மாலை குதூகலமாக கதைத்து சென்றவர்கள் சிதறி கிடந்த கொடுமையை எவ்வாறு சொல்வது? அங்கே கிளை பரப்பி நின்ற மரங்கள் கூட எம் மாணவ செல்வங்களில் சிதறல்களை தாங்கி நின்ற கோலம் நினைக்கவே முடியாதது. திரும்பும் இடமெங்கும் இரத்த சிதறல். கால் கை என்றும் உடலின் எந்த பகுதி என்று கூட இனங்கான முடியாத அளவுக்கு பிய்ந்துபோன உடல்கள். ஒரே வயது, ஒரே உணர்வு, ஒரே எண்ணங்கள் என்று கல்வியோடு தேசத்தை நேசித்த அவர்கள் சிதறிப்போன அந்த நாளை எவ்வாறு நாம் மறப்பது? சிதறிய உடல் துண்டுகள் மரங்களில் தொங்கி கொண்டிருந்தன. அங்கவீனமான மாணவிகளின் உடல் துண்டுகள் காணாமல் போயிருந்தன. வயிற்று காயத்தோடு தன் மைத்துனியை இழுத்து கொண்டு ஓட முனைந்த என் ஒன்றுவிட்ட தங்கையின் வகுப்புத் தோழி இரண்டு கால்களும் இழந்து மடிந்து கிடந்த கொடுமையை எப்படி நினைப்பது. எங்கு கண்டாலும் அண்ணா என்று அன்பாக அழைக்கும் அவள் இறந்து கிடந்த கொடுமை தாங்க முடியாது இருந்தது.
ஒரே வீட்டில் கூட பிறந்தவர்களும் உறவுகளும் நண்பிகளும் என்று கூடி சந்தோசமாக இருந்த அந்த காலை பொழுது அவர்களை அழிக்க எதிரி திட்டமிட்டு செய்து முடித்தான். செஞ்சோலை வளாகமே சிதைக்கப்பட்டு முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருந்தது. செஞ்சோலை வளாகம் 54 மாணவிகளின் குருதியை தன் மண்ணில் தாங்கி கொண்டது. காயப்பட்ட மாணவிகளின் ஓலம் இன்றும் என் செவிகளில் இருந்து மறையாமல் ஒலித்து கொண்டிருக்கிறது. எங்கள் பிரதேச மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன காயப்பட்ட மாணவிகளை காத்திட அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களும் ஈடுபடுத்தப்பட்டன. ஆனாலும் பல மாணவிகள் மடிந்தே போனார்கள்.
டேய் என்னடா ஆச்சு வண்டிய இப்பிடி ஓடுறாய் முன்னால வாகனம் வாறது கூடத் தெரியாமல்? நண்பன் கேட்கிறான். திடுக்கிட்டு நிமிர்கிறேன். என்னை சுதாகரித்து கொள்கிறேன். இல்ல மச்சான் இப்பிடித்தானே செஞ்சோலையிலும் பிள்ளையள கொன்றவன்… அவன் மௌனித்து போகிறான். அவன் கரங்கள் மட்டும் இருக்கையில் ஓங்கி குத்தும் ஓசை என் செவிகளில் கேட்கிறது.
பயணம் தொடரும்….
கவிமகன்.இ