வடமாகாணத்தில் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை கடற்படையினருக்கே நிரந்தரமாக்கும் முயற்சிகளுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அவற்றை கடற்படையினருக்கு நிரந்தரமாக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு இன்று தலைமன்னார் கடற்படைத் தளத்தில் விசேட கலந்துரையாடலொன்று ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
வடமாகாணத்தில் பல பிரதேசங்கள் கடற்படை, தரைப்படை, விமானப்படை என சிறிலங்காப் படையிரால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது.
இவற்றை தமக்குச் சொந்தமாக்குவதற்கு பல தடவைகள் முயற்சி செய்தும் மக்களின் தொடர் போராட்டத்தினால் கைவிடப்பட்டுமுள்ளன.
இந்நிலையில், படைத்துறைச் செயற்பாட்டாளராகச் செயற்பட்டு தற்போது வவுனியா மாவட்ட நில அளவைத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியாக பதவி உயர்வு பெற்றிருக்கின்ற கே. சமரசிங்க என்பவரின் ஏற்பாட்டில் காணி அபகரிப்புத் தொடர்பான கூட்டம்ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டம், இன்று தலைமன்னார் கடற்படை தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளதுடன் நில அளவைத் திணைக்கள முக்கியஸ்தர்களும் கடற்படையினரும் இணைந்து முடிவெடுத்திருப்பதாக வவுனியா நில அளவைத் திணைக்களத்தின் பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரியப்படுத்தியும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார்.