அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் இனவெறி மோதலுக்கு அதிருப்தி தெரிவித்து வர்த்தக குழுக்களின் மூத்த சி.இ.ஓ-க்கள் பதவி விலகியதையடுத்து அக்குழுவை கலைக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார்.
அமெரிக்காவில் 1861-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது விர்ஜினியா மாநிலத்தில் அடிமைகள் சார்புப் படையை ராபர்ட் இ லீ என்பவர் வழிநடத்திச் சென்றார். சார்லொட்டஸ்வில்லி நகரில் உள்ள ஒரு பூங்காவில் ராபர்ட் இ லீ சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது சிலை அகற்றப்பட இருப்பதாக அங்குள்ள மக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனைக் கண்டித்து கடந்த வாரம் வலதுசாரி வெள்ளை இனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் சார்லொட்டஸ்வில்லி நகரில் பேரணி நடத்தினர். இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் எதிர்ப்பு பேரணி நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த மோதலின் போது கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியதில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், இனவெறி ஆதரவாளர்கள், அவர்களின் எதிர்ப்பாளர்கள் இருவருமே வன்முறை சம்பவத்திற்கு காரணம் என அதிபர் டிரம்ப் இந்த மோதலை கடுமையாக கண்டித்திருந்தார். இதனையடுத்து, இனமோதலை டிரம்ப் கையாண்ட விதத்திற்கு அதிருப்தி தெரிவித்து அந்நாட்டின் வர்த்தக குழுவில் உள்ள பல சி.இ.ஓ.க்கள் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், சி.இ.ஓ.க்களின் ராஜினாமாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வர்த்தக கவுன்சிலை கலைக்கும் முடிவை டிரம்ப் எடுத்துள்ளார். “ இந்த வர்த்தகக் குழுக்களின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதை விட அவற்றை நான் கலைக்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.