ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் முதற்பெண்மணிஇ சிராந்தி ராஜபக்சவிடம் எழுப்பப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் ஒன்றும் தெரியாது என்று பதிலளித்துள்ளார்.
தாஜூதீன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிராந்தி ராஜபக்சவின் கீழ் இருந்த சிரிரிய சவிய அறக்கட்டளைக்கு சொந்தமான டிபென்டர் வாகனம் தொடர்பான விசாரணைக்கு நேற்றுக்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு சிராந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.
சுமார் இரண்டரை மணித்தியாலங்களாக முன்னாள் முதற் பெண்மணியிடம் குற்றப் புலனாய்வாளர்கள் முறைப்பாட்டினைப் பதிவு செய்திருந்தனர்.
குறித்த விசாரணையின்போது சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவோ அல்லது அவரது சட்டத்தரணியோ உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், விசாரணை நிறைவுற்றதும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை அறிக்கையை வாசித்து கையொப்பமிடுமாறு சிரந்தி ராஜபக்ஷவுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனக்கு சிங்களம் தெரியாது என சிறிலங்காவின் முன்னாள் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவரது சட்டத்தரணி ஜயகந்த உள்ளழைக்கப்பட்டு அவர் மூலம்சிரந்தி ராஜபக்ஷவுக்கு அவரது வாக்குமூலம் வாசித்துக் காட்டப்பட்டது.