நல்லிணக்கத்துக்கு கல்வியே தடையாக உள்ளது எனத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, தமிழ், சிங்களம், முஸ்லிம் இனங்களுக்குத் தனித்தனிப் பாடசாலை அமைக்காது, ஒரே பாடசாலையிலேயே தமிழ், சிங்களம், முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கக்கூடியவாறு எதிர்காலகத்தில் பாடசாலைகள் அமைக்கப்படவேண்டுமென வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கின் அபிவிருத்திப் பணிகளிலும், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நல்லிணக்கத்துக்கு தடையாக இருப்பது கல்வியே. சிங்கள மகா வித்தியாலயம், தமிழ் மகா வித்தியாலயம், முஸ்லிம் மகா வித்தியாலயம் என நம்முள்ளே பிரிவினையை ஏற்படுத்தக் கூடிய வகையில் பாடசாலைகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்கு மாறாக சிறிசேன, நடராசா, முகமட் ஆகியோர் ஒன்றாக ஒரு இடத்தில் அமர்ந்து படிக்கின்ற வகையில் பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும்.
குறைந்தது பாடசாலையை விட்டு வெளியேறியதன் பின்னர் என்னுடன் படித்த எனது நண்பன் நடராசா என்று பேசக்கூடிய வகையில் நாம் செயற்பட வேண்டும்.
மூன்றினங்களும் ஒன்றாக இணைந்து செயற்படுவதன்மூலமே நல்லிணக்கத்தை உருவாக்கமுடியும். இன, மத, குலங்களை மறந்து நாங்கள்ஒன்றாக பயணிக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.
அத்துடன், வடக்கில் இராணுவத்தினர் நல்லிணக்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.