இன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 102ஆவது அமர்வில், வடமாகாண முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் கடுமையான கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது.
வடமாகாண சபையின் 102ஆவது அமர்வு இன்று கைதடியிலுள்ள வடமாகாண கட்டடத்தில் நடைபெற்றது.
இந்த அமர்வில் கடந்த மாதம் 21ஆம் நாள் வடமாகாண முதலமைச்சர் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனத்திற்கு இன்று வடமாகாண முதலமைச்சர் பதிலளிக்கும்போது, ‘தனது கட்சியில் வேண்டத்தகாதவராக மாறியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, அவைத் தலைவரின் சாதுரியத்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்துள்ளார். ஊடகங்களில் தனது பெயர் வர வேண்டும் என்பதற்காக எம்மைக் கையலாகதவர்களாகக் காட்ட நினைக்கின்றார்.’ என்று வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், தனது கட்சியின் வேண்டப்படாத நபராக மாறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், அடுத்த தேர்தலில் ஆசனம் பெறுவதற்காக ஊடகங்களில் விளம்பரம் தேடுகிறார் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து எதிர்கட்சித் தலைவர் தனது ஆசனத்திலிருந்து எழும்பி காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார். இதனையடுத்து அவைத்தலைவர் தலையிட்டு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கதைக்குமாறு பணிப்புரை விடுத்ததற்கமைய தவராசா தனது ஆசனத்தில் அமர்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்செய்திகள் தெரிவிக்கின்றன