நான் யாழ். மாநகர சபை ஆணையாளராக இருந்தபோது தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவுத் தூபியை திறந்துவைத்து அதனை எல்லைப்படுத்தியதால் என்மீது துப்பாக்கிப் பிரயோகம்மேற்கொள்ளப்பட்டது என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையின் 102ஆவது அமர்வு மாகாணசபை கட்டடத்தில் நடைபெற்று வருகின்றது.
இதன்போது, நல்லூர் பின்வீதியில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி புனரமைப்புச் செய்யப்பட்டு, அதனை எல்லைப்படுத்தவேண்டுமென வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்திருந்தார்.
யாழ். மாநகரசபை ஆணையாளருக்கு இக்கோரிக்கையை விடுத்த அவர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதற்கு ஆதரவு வழங்கவேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, தான் மாநகர சபை ஆணையாளராக இருந்தபோது தியாக தீபம் லெப்.கேணல். திலீபனின் நினைவுத் தூபியை புனரமைப்புச் செய்து திறந்து வைத்ததாகவும், இதன் காரணமாக தன்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.