சிறிலங்கா அரசாங்கத்தின் அரசியல் போக்கு திசைமாறி வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகளை உடனடியாகத் தலையிடுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐநாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் தொடர்ந்தும் குடியிருப்பது நல்லிணக்கத்துக்கு சாதகமானது அல்ல எனவும், அத்துடன் மக்கள் பொறுமையிழந்து விட்டனர் எனவும் இனியும் உலக நாடுகள் பார்த்துக்கொண்டிருக்காது உடனடியாகத் தலையிடவேண்டுமெனவும் வலியுறுத்தி ஐநா பொதுச் செயலர், ஐநாமனித உரிமைகள் ஆணையளார் மற்றும் உலக நாடுகளின் தூதுவர்களுக்கு இரா.சம்பந்தன் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவு மக்கள் இராணுவத்தினரிடமிருந்து தமது காணிகளை விடுவிப்பதற்காக 170 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் காணி விடுவிப்புத் தொடர்பாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேரடியாகப் பேசப்பட்டது. இருப்பினும் அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காததால் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இரா.சம்பந்தனால் கடிதம்அனுப்பி வைக்கப்பட்டது.
இருப்பினும், அக்கடிதத்திற்கு இதுவரை எந்தவித சாதகமான பதிலும் கிடைக்காததால், கடந்த 11ஆம் நாள் மீண்டும் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும்மிகவும்காட்டமாக இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அக்கடிதத்திற்கும் அரசாங்கத்தினால் இதுவரை பதில் வழங்கப்படவில்லை.
இதனையடுத்து ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியும் இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை.
இவற்றைத் தவிர, புதிய அரசியலமைப்பை வெளியிடுவதை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் வேணுமென்று இழுத்தடிப்புச் செய்வதால் பொறுமையிழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உடனடியாக உலக நாடுகளைத் தலையிடுமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.
நன்றி
– துளியம்