வடமாகாணம், கிளிநொச்சியைச் சேர்ந்த மயில்வாகனம் செல்வராஜா என்ற விவசாயி ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவருக்கு சான்றிதழ், விருது உட்பட நான்கு இலட்சம் பணமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாணம் வறட்சியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சியின் செல்வா நகரைச் சேர்ந்த மயில்வாகனம் செல்வராஜா, தனது தளராத முயற்சியினால் இச்சாதனையை எட்டியுள்ளார்.
6 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயத்தை மேற்கொண்டுள்ள இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியைப் பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதில் முதலாம் இடத்தினை களுத்துறையைச் சேர்ந்த விவசாயி பெற்றுள்ளார்.
இவர் விசாயம் மாத்திரமல்லாது, கோழி மற்றும் கால்நடைகளையும் வளர்த்து வருவதுடன், இயற்கைப் பசளையைப் பயன்படுத்தியே விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.