யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்குப் பின்புறமாக உள்ள மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள 9 கடைகள் கொண்ட கடைத்தொகுதி அகற்ற இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே காவல்துறையினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. யாழ்.மாநகரசபையின் கடந்த ஆட்சிக்காலத்தில் சட்டத்துக்கு புறம்பாக குறித்த கடைத்தொகுதிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ்.மாநகர சபை ஆணையாளர் வாகீசனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது இது நீதிமன்ற விவகாரம் என்பதால் கருத்துத் தெரிவிக்க முடியாதென அவர் மறுத்துவிட்டார்.
இதேவேளை குறித்த கடைகள் இடிப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்து எதிர்வரும் 18ஆம் நாள் ஆதரிப்பதற்காக திகதியிடப்பட்டுள்ள நிலையில் கடைகளை இடிப்பதென்பது இயற்கைநீதிக்கு எதிரானது என பிரபல சட்டத்தரணி சுகாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.