ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது வான் மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த வான் ஒன்று பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது. இதனால், அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
மக்கள் மீது வேனை மோதவிட்டு அதனை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கோர தாக்குதலில் 13 பொதுமக்கள் பலியானதாகவும், 30-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
நிச்சயமாக இது தீவிரவாத தாக்குதலாகதான் இருக்கும் என்று அந்நாட்டு காவல் துறை கூறியிருந்த நிலையில், இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், வேனை ஓட்டிவந்தவன் பிடிபடவில்லை. இந்த தாக்குதலை அடுத்து நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திய காரை வாடகைக்கு வாங்கியவர் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ட்ரிஸ் ஒபகிர் (20) என்று கூறியுள்ள காவல் துறை, அவனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இதேபோல், பார்சிலோனா நகரின் மற்றொரு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் காவல் துறை மீது வாகனத்தை மோத விட்ட நபரைகாவல் துறை சுட்டுக்கொன்றுள்ளனர். எனினும், இந்த தாக்குதலுக்கும், பாதசாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பதை அவர்கள் தெளிவுபடுத்தவில்லை.
கடந்த புதன் கிழமையில் இந்நகரில் உள்ள ஒரு வீட்டின் வெளியே வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் பலியானார். இந்த நிகழ்வுக்கும் தற்போது நடந்த நிகழ்வுக்கும் சம்பந்தம் உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாதசாரிகள் மீது காரை மோதவிட்டு தாக்குதல் நடத்தியது எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது. அந்த இயக்கத்தின் ஊடகமான அமாக்-கில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. எனினும், காவல் துறை இதனை உறுதிப்படுத்தவில்லை.
சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அதிக பொதுமக்கள் கூடியுள்ள பகுதிகளில் வாகனங்களை மோதவிட்டு தீவிரவாதிகள் அதிகளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.