இந்திய இராணுவ அதிகாரிகள் குழு கல்வியங்காட்டில் கொல்லப்பட்ட தமது சக இராணுவச் சிப்பாய்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தூபியில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இந்திய இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் இப்போதும் உள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் போராளிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 18ஆம் திகதி அந்தச் சண்டை இடம்பெற்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் 11 பேர் பங்கேற்றிருந்தோம்.
இந்தத் தாக்குதலுக்கு நாம் புதுயுக்தியைப் பயன்படுத்தியிருந்தோம். எம்மிடமிருந்த ஆயுதங்களை இந்திய இராணுவத்தினரிடம் ஒப்படைத்த காலம் அது. இந்திய இராணுவத்தை எதிர்கொள்வதற்கு சில நுட்பங்களைப் பயன்படுத்தினோம்.
வெற்றுக் காஸ் சிலிண்டர்களில் சக்கை நிரப்பி எமக்குத் தரப்பட்டிருந்தன. கண்ணிவெடி வடிவில் அவை தயார் செய்யப்பட்டிருந்தன. எம்மில் 7 பேரிடம் மாத்திரமே துப்பாக்கிகள் இருந்தன. அதன் மூலம் இந்திய இராணுவத்துக்கு எதிராகக் காப்புச் சூடு நடத்தி, அவர்களின் ஆயுதங்களைப் பறித்துச் செல்வதற்கு திட்டம் தீட்டியிருந்தோம்.
திட்டமிட்டபடி எமது தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 5 இந்திய இராணுவச் சிப்பாய்கள் உயிரிழந்தனர். 9 அல்லது 11 பேர் காயமடைந்ததாக ஞாபகம். இந்தத் தாக்குதலில் எமது தரப்பில் ஒரு போராளி வீரச்சாவடைந்திருந்தார். மன்னார் சின்னப்பண்டிவிரிச்சானைச் சேர்ந்த றோயல் என்ற இயக்கப் பெயருடைய போராளியே வீரசாவைத் தழுவியிருந்தார். ஒருவர் காயமடைந்திருந்தார்.
உயிரிழந்த இந்திய சிப்பாய்களின் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு நாங்கள் காங்கேசன்துறை வீதிப் பக்கமாக ஓடினோம். எமது தாக்குதலுக்கு தலைமை தாங்கிய தளபதி 1991ஆம் ஆண்டு வலி.வடக்கில் இலங்கை இராணுவத்தினருடன் நடைபெற்ற மோதலில் வீரச்சாவடைந்திருந்தார்.
இந்திய இராணுவத்தினரின் தூபி உள்ள இடத்திலிருந்து சில நூறு மீற்றர் தூரத்தில்தான் எமது ஆயிரக்கணக்கான மாவீரர்களைப் புதைத்தோம். இன்று அந்தத் துயிலும் இல்லம் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளது என்றும் தாக்குதலில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளனர்.