நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ள வரி நிவாரண கடன் திட்ட நடவடிக்கைகள் பல்வேறு வங்கிகள் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைவாக 8 வகையான கடன்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கடன்திட்டத்திற்கு அமைவாக அரசாங்கத்திற்கு வட்டி நிவாரணம் கிடைப்பதுடன் அராங்கம் இந்த வருடத்தில் மாத்திரம் 4,475 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்திருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
ரன் அஸ்வென்ன (கைத்தொழில்)
விவசாய தொழிற்துறை மூலமான வருமானத்தை அதிகரிப்பதற்கும் வர்த்தக வசதிகளுக்குமாக இந்த கடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் விவவாயிகள், விவசாய அமைப்புக்கள், விவசாய துறையுடன் சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனங்களின் பயன்களை அதிகரிப்பதற்கு தேவையான தொழில்நுட்பம் அறிமுகப்படுத்துவதற்கும், தனியார் துறையினர் விவசாயிகளுடன் முன்னர் செய்துகொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலான வர்த்தக விரிவாக்கல் செய்யப்பட்ட பாரிய அளவிலான விவசாய பண்ணைகளை ஆரம்பிப்பதற்கும் அரிசி உரிமையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடனான களஞ்சிய வசதிகளை அமைப்பதற்கும், மீன் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் அலங்கார மீன்நடவடிக்கை வர்த்தகர்களுக்கும் தமது உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு நிவாரண வட்டியின் கீழ் கடனை பெறமுடியயும்.
இந்த திட்டத்த்தின் கீழ் 750 மில்லியன் ரூபா வரையில் கடனை பெற்றுக்கொள்ள முடியும். திருப்பி செலுத்தவேண்டிய காலம் 5 வருடங்களாகும்.
வட்டியில் 50 சதவீதத்தினை அரசாங்கம் செலுத்தும் என்பதனால் தற்போதைய வர்த்தக வட்டிக்கு அமைவாக கடனுக்காக செலுத்தவேண்டிய வட்டிவீதம் 6.54 ஆகும். அரசாங்கம் இந்த வருடத்தில் நிவாரண வட்டிக்கடனுக்காக 927 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
விவசாயக்கடன் (கொவிநவோதா)
அரும்பொட்டுதல், கன்றுகளை வளர்த்தல், அறுவடை, விவசாயக்காணிகளை தயாரித்தல் போன்ற விவசாய பணிகளுக்காக இயந்திரங்களை பெற்றுக்கொள்வதற்காக சிறிய அளவிலான விவசாய இயந்திரங்கள் மற்றும் இத்துறையில் ஈடுபட்டுள்ளோரின் உற்பத்தி செலவை குறைப்பதற்கும் கூடுதலான அறுவடையை பெற்றுக்கொள்வதன் மூலம் இவர்களை பொருளாதாரத்துறையில் வலுவடையச்செய்வதே இந்த கடன் திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் 5 இலட்சம் ரூபாவை கடனாக பெற்றுக்கொள்ளமுடியும். ஐந்து வருட காலத்திற்குள் இதனை திருப்பி செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான வட்டியில் 75 சதவீதத்தினை அரசாங்கம் பொறுப்பேற்கும். இந்த கடனுக்கு 3.27 வீத வட்டியையே செலுத்தவேண்டும்.
கோழி இறைச்சி குளிரூட்டி கடன் (திறிசவிய)
கிராமங்களில் போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்காக சிறந்த கோழி இறைச்சி சார்ந்த உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக அதிகுளிர்சாதன பெட்டிகளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக 15 ஆயிரம் ரூபா முதல் 50 ஆயிரம் ரூபா வரையிலான கடனை அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளினூடாக பெற்றுக்கொள்ளமுடியும்.
கோழி இறைச்சி உற்பத்தி தொழிற்துறையை தெரிவுசெய்யும் புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.
இதற்கான வட்டியை அரசாங்கம் முழுமையாக செலுத்தும். 4 வருட காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வட்டியை செலுத்துவதற்காக அரசாங்கம் இந்த வருடத்தில் 75 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
தொழில்முயற்சிக்கடன் (ஜயஇசுறு)
தோட்டம் மலர் அச்சு கைப்பணி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிறு தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்காக கடன்வசதிகள் வழங்கப்படவுள்ளது.
இந்த தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் 10 முதல் 50 ஊழியர்களை கொண்டிருப்பதுடன். 25 மில்லியன் முதல் 250 மில்லியனுக்கிடையிலான வரியை செலுத்துவதற்கும் சிறியஅளவிலான தொழிற்துறைக்காக 5 வருட காலத்தில் திருப்பி செலுத்தக்கூடிய வகையில் 50 மில்லியன் ரூபா வரையிலும் இத்துறையில் சிறியளவிலான தொழிற்துறை ஏற்றுமதி நடவடிக்கையில் ஈடுபடுவோராயின் 100 மில்லியன் ரூபா வரையிலான ஆகக்கூடிய கடனையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
இதற்கான வட்டியில் 50 சதவீதத்தினை அரசாங்கம் செலுத்தும். கடனை பெறுவோர் 6.54 வீதத்தை செலுத்தவேண்டும்.
இதே போன்று இத்துறையில் ஈடுபட்டுள்ள வருடாந்தம் 250 முதல் 750 மில்லியன் ரூபாவரையில் வரியை செலுத்துவோரும் 51 முதல் 300 ஊழியர்களை கொண்டிருப்போரும் 5 வருடத்தில் திருப்பி செலுத்த கூடிய 200 மில்லியன் ரூபா வரையிலும் ஆகக்கூடிய தொகையாக இத்துறையில் நடுத்தர தொழிற்துறையில் ஏற்றுமதி நடவடிக்கையில் ஈடுபடுவோராயின் 400 மில்லியன் ரூபா வரையிலும் ஆகக்கூடிய கடனாக பெற்றுக்கொள்ளமுடியும்.
வட்டியில் 25 சதவீதத்ததை அரசாங்கம் செலுத்தும். அதேவேளை தற்பொழுது சந்தையில் வட்டிவீத நடைமுறைக்கமைவாக கடனை பெற்றுக்கொள்ளுவோர் வருடாந்தம் செலுத்தவேண்டிய வட்டிவீதம் 9.81 ஆகும். அரசாங்கம் வட்டிக்காக இந்த ஆண்டில் 750 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
வீட்டுக்கடன் (சொந்துறுபியச)
நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தி செய்யமுடியாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அதாவது 750 சதுர அடிக்கு குறைவான வீடுகளுக்கு 2இலட்சம் ரூபா வரை கடன் வழங்கப்படும்.
வீட்டின் கட்டுமாணப்பணிகளை பூர்த்திசெய்வதற்கும் அல்லது விஸ்தரிப்பதற்கோ இந்த கடனை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான 50 சதவீத வட்டியை அரசாங்கம் செலுத்தும். கடனை செலுத்த வேண்டியோர் 6.54 சதவீத வட்டியை மாத்திரமே செலுத்தவேண்டும்.
ஊடகக்கடன் (மாத்தியஅருண)
கஷ்டமான நிலையில் ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு கடன்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் இந்த கடன் வழங்கப்படும். மூன்று இலட்சம் ரூபா வரை வட்டியற்ற கடன் வழங்கப்படுவதுடன் ஊடக உபகரணங்களை மேம்படுத்துவதற்காக ஒன்றரை இலட்ச ரூபா கடன் 6.5 சதவீத நிவாரண வருடாந்த வட்டியையும் பெற்றுக்கொள்ளமுடியும். 4 வருட காலத்தில் இதனை திருப்பி செலுத்த முடியும்.
அரசாங்கம் இந்த ஆண்டில் இதற்காக 25 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
பாடசாலை வாகன கடன் (ரியசக்தி)
பாடசாலை பிள்ளைகளின் போக்குவரத்து வசதி கருதி சிறிய வான்களை பயன்படுத்துவோர் அதாவது 28 ஆசனங்களை கொண்ட பஸ் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு 40 இலட்சம் ரூபா வரை கடன் வழங்கப்படும் இதிலும் அரசாங்கம் 75 சதவீத வட்டியை செலுத்தும். பஸ்ஸை பெற்றுக்கொள்வோர் 3.27 சதவீத வட்டியையே செலுத்தவேண்டும்.
சூரிய கலகடன் (ரிவிபலசவி)
சகல வீடுகளுக்கும் சூரிய கலன்களை பொருத்துவதற்கு இந்த கடன்திட்டத்தின் கீழ் வீடொன்றிற்கு மூன்று இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை கடனாக பெற்றுக்கொள்ளமுடியும். இதனை பயன்படுத்துவோர் மின்சார சபைக்கு மேலதிக மின்சாரத்தை வழங்குவதன் மூலம் மேலதிக வருமானத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
அரசாங்கத்தினால் இதற்கு 06 சதவீத வட்டி வழங்கப்படும். திருப்பிசெலுத்தவேண்டிய காலம் 5 வருடங்களாகும்.
இதற்காக அரசாங்கம் இந்த வருடத்தில் 1500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.