வடமாகாண போக்குவரத்து, மீன்பிடி, கிராம, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனை கட்சியின் அங்கத்துவத்தில் தொடர்ந்து நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோ இன்றைய தினம் தீர்க்கமான முடிவொன்றை எட்டவுள்ளதாக அறிவித்துள்ளது.
வடமாகாண அமைச்சர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் நியமிக்கப்பட்டிருந்த விசாரணைக்குழு கையளித்த அறிக்கையின் பிரகாரம் அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜா ஆகியோர் பதிவி விலகியிருந்தனர்.
இந்நிலையில் ஏனைய அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா.டெனிஸ்வரன் ஆகியோரையும் விசாரணை நிறைவடையும் வரையில் பதவியிலிருந்து ஒதுங்கியிருக்குமாறும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வட மாகாண முதலைமச்சர் கோரியிருந்தார்.
அதன் பின்னர் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிககையில்லாப் பிரேரணை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டபோது பங்காளிக்கட்சியின் உறுப்பினரான அமைச்சர் டெனிஸ்வரன் அதில் தமது கட்சியான ரெலோவிற்கு முன்னறிவித்தலைச் செய்யாது கையொப்பமிட்டிருந்தார்.
இதனையடுத்து ரெலோவின் தலைமைக்குழு அமைச்சரிடத்தில் விளக்கம் கோரியிருந்ததோடு அமைச்சுப்பதவியிலிருந்து விலகுமாறும் வலியுத்திவந்தது.
இந்நிலையில அவ்வியக்கத்தின் கடந்த தலைமைக்குழு கூட்டத்தில் டெனிஸ்வரன் கட்சியின் தலைமைக்குழுவின் முடிவுக்கு சாத்தியமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருந்தாக தெரிவிக்கப்பட்டு கடந்த திங்களன்று பதவி விலகுவார் என்றும் அறிவிக்கப்பட்டிந்தது.
இருந்தபோதும் அமைச்சர் டெனிஸ்வரன் தான் சுயாதீனமாக அமைச்சுப்பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்ற முடிவை திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இவ்வாறான நிலையிலேயே ரெலோ இன்றையதினம் டெனிஸ்வரனின் செயற்பாடுகள், கருத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கூடுகின்றது.
இதேவேளை அமைச்சர் டெனிஸ்வரன் பதவி விலக கூடாது என தனியார் போக்குவரத்து துறையினர், பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தி வருவதோடு எதிர்க்கட்சித்தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன். இது தொடர்பான சமரசமான முடிவுகளைப் பெறும்வகையில் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
அதேநேரம் தான் அநீதி இழைக்கவில்லை.மக்களுக்காகவே செயற்பட்டேன். வெறுமனே விருப்பு வெறுப்புக்களுக்கான நாம் பதில்களை வழங்கிக்கொண்ருக்க முடியாது என தெரிவித்த அமைச்சர் டெனிஸ்வரன் மக்களே முடிவுகளை எடுப்பார்க எனவும் தான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகவில்லையென்பதையும் வடமாகாண ஆளுநருக்கு அறிவித்துள்ளார். இவ்வாறான பின்னணியிலேயே இன்றைய கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.