2017 ஆம் கல்வியாண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது. இம்முறை ஊர்காவற்றுறை, நயினாதீவு, அனலைதீவு உட்பட நாடுபூராகவும் அமைக்கப்பட்டுள்ள மூவாயிரத்து பதிநான்கு பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.
மூன்று இலட்சத்து 56,728 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதுடன் அதில் 562 பேர் விசேட தேவையுடைய மாணவர்களாவர். இதேவேளை பரீட்சைக் கடமைகளில் 28 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு வினாப்பத்திரங்களைக் கொண்ட குறித்த பரீட்சையின் முதல் வினாப்பத்திரம் காலை 9.30 மணி தொடக்கம் 10.15 மணி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் வினாப் பத்திரம் காலை 10.45 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே பரீட்சார்த்திகள் காலை ஒன்பது மணிக்கு பரீட்சை மண்டபத்திற்குள் பிரசன்னமாகி இருக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கான சுட்டெண்ணை தமது உடையின் இடது பக்கத்தில் இணைத்திருக்க வேண்டும். அத்துடன் பரீட்சார்த்திகள் விடை எழுதுவதற்கு பென்சில் அல்லது பேனா பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பிள்ளைகளை பரீட்சைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர் பரீட்சை நிலையத்திற்குள்ளோ, பரீட்சை நிலைய வளாகத்திற்குள்ளோ செல்வதற்கு
அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடைவேளை நேரத்திலும் பெற்றோர் பரீட்சை நிலைய வளாகத்திற்குள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆகவே பிள்ளைகள் பரீட்சை நிலைய வளாகத்திற்குள் நுழையும்போது அவர்களுக்கான உணவையும் தண்ணீர்போத்தலையும் தயார் செய்து அனுப்புமாறு பெற்றோரை பரீட்சைகள் திணைக்களம் வேண்டியுள்ளது.
இதேவேைள பரீட்சை மேற்பார்வையாளர்கள் உட்பட பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுபவர்கள் பரீட்சை நிலையத்திற்குள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதியளிக்கப்பட்ட அதிகாரிகள் தவிர்ந்த வேறு எவரும் பரீட்சை நிலைய வாளாகத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அன்றைய தினம் பாடசாலை அதிபரின் காரியாலயத்தை மூடுமாறும் பாடசாலையில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணிகள் உட்பட சகல வேலைத்திட்டங்களையும் நிறுத்துமாறும் பரீட்சைகள் திணைக்களம் அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அத்துடன் பரீட்சை முடிந்த பின்னரும் வினாப்பத்திரங்களை தம்வசம் வைத்துக்கொள்ளல், பிரதி பண்ணல் என்பன பொலிஸாரினால் கைது செய்யத் தகுந்த குற்றங்களாகும். எனவே பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்
பில் முறைப்பாடுகள் இருப்பின் அதனை பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர சேவை இலக்கத் துடனும் பொலிஸ் நிலையத்தின் அவசர சேவை இலக் கமான 119 இற்கும் பரீட்சைகள் திணைக்களத்தின் 011 2784208, 011 2784537, 011 3188350, 011 3140314 என்ற தொலைபேசி இலக்கங்களுடனும் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறும் பரீட்சைகள் திணைக்களம் வேண்டியுள்ளது.