வசந்த காலங்கள் தொடங்கினால் தமிழர்களின் வாழ்வில் கலைநிகழ்வும் களியாட்ட கொண்டாட்டங்களுக்கு அளவின்றி போகிறது. அந்த களியாட்ட நிகழ்வுகளை புறம்தள்ளவோ அல்லது வேண்டாம் என்று கூறிடவோ நாம் முன்வரவில்லை. அந்த நிகழ்வின் பலாபலன்கள் எவ்வாறு மாற்றமடைகின்றது எமது கலைஞர்களின் செயற்பாடுகள் அடுத்தகட்ட நிகழ்வுக்கு நகர்கின்றதா? என்பதே தான் இன்றைய கேள்வியாக இருக்கிறது. எமது போராட்டம் மௌனித்த பின்னர் எம்மவர்களின் ரசனை என்பது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதனை நாம் இங்கே சுட்டிக் கட்டிட விரும்புகின்றோம்.
இந்திய தொலைக்காட்சிகளுக்கு அடிமையாக்கப்பட்டுள்ள எம்மவர்களை வேறு திசையில் பயணிக்க வைப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தாலும் நாம் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் விடுவது மிகவும் பாரியதொரு சிக்கலையே உருவாக்கும்.
திறமைகள் உள்ள பலரும் சுயநலம் தேடியவர்களாக தம்மை தாமே முன்னேற்றி செல்வதற்காக கொள்கை தவறிய மனிதர்களாகவே வாழ்கின்றனர். கொள்கை தவறிய மனிதரால் நிலையான ஒரு காரியத்தினை செய்ய முடியாத நிலையே காணப்படுகின்றது. அந்தவகையில் இன்று புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் அவர்களின் நிகழ்வுகளும் கொள்கை தவறி உன்னதமான நோக்கினை எட்டிட முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது.
ஈழத்து புலம்பெயர் தமிழர்களின் வணிக அமைப்புகளின் கூட்டமைப்பில் லைகா, லிபரா என்பவை இன்றைய காலகட்டத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றது. அந்த வகையில் லைகா நிறுவனம் முழுக்க முழுக்க இந்திய சினிமாவில் தனது கால்பரப்பினை பரப்பி நிற்க, லிபரா நிறுவனம் ”ஈழத்து கலைஞர்களை வளர்த்து விடுகின்றோம்” என்ற போர்வையில் தனது வியாபார நோக்கினை நகர்த்தி செல்கின்றது. ஐபிசி தமிழின் வியாபார தந்திரத்திற்கு அமைவாகவே அவர்களது ஒவ்வொரு நகர்வுகளும் நிகழ்கின்றது.
ஐ பி சி தமிழா 2017 இல் பாடும் திறமையானவர்களை எதன் அடிப்படையில் தெரிவுசெய்தார்கள்? என்ற கேள்வி ஒருபுறம் தொக்கி நின்றாலும் யானைப்பசியுள்ள கலைஞர்கள் சோளப்பொரிக்கு ஆசைப்படும் நிலையே இன்று வாழ்கின்றனர்.இதனாலேயே ஐபிசி தமிழில் பாட ஒரு வாய்ப்பு கிடைத்தாலே போதும் என்ற மனநிலையில் அநேக தமிழர்கள் வாழ்கின்றார். இந்த நிகழ்வால் எனது நோக்கம் நிறைவேறுமா? அப்படி நிறைவேறினால் நான் மட்டும் அடுத்த கட்டம் நோக்கி முன்னேறினால் போதுமா? எமது கலை எமது நோக்கம் அடுத்த கட்டம் நோக்கி நகர தேவையில்லையா? என்ற மனச்சாட்சி கேள்வியை எந்த ஒரு கலைஞனும் கேட்பதில்லை.ஆழமாக கலையை நேசிக்கும் ஒருவனின் அடிமனதில் இந்த கேள்வியே முதலில் உருவாக வேண்டும். அவ்வாறான கேள்வி உருவாகாமல் விட்டால் அவன் ஆழமாக கலையை நேசிக்கவில்லை என்றே பொருளாகின்றது. ஆக இன்றைய கலைஞர்கள் பலரும் எமது கலையை ஆழமாக நேசிக்கவில்லை என்றேதான் எம்மால் கூறிட முடியும்.
கலைநிகழ்வு ஒன்று நிகழ்கின்றது வாருங்கள் என்று கேட்டால் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் ”மோதிர விரலால் குட்டு விழுகின்றது வாங்குவோம்” என்ற மனநிலையிலேயே அநேக ரசிகர்கள் வாழ்கின்றார்கள். இதற்கான முக்கிய காரணம் என்ன என்று அலசி ஆராய்ந்தோமானால் கற்றலும் தேடலும் குறைந்து காணப்படுவதேயாகும். ஒரு நிகழ்வு நிகழ்கின்றது என்றால்
யார் ? எதற்காக? எதனால்? எப்படி? என்ற கேள்விகளை யாருமே இன்று கேட்பதில்லை.
ஏதோ ஒரு நிகழ்வு நிகழ்கின்றது. வாருங்கள் போவோம், அனுமதியும் குறைவாக கிடைக்கின்றது. அங்கே சென்றால் 6 மணிநேரம் பொழுதுபோக்க முடியும் என்ற மனநிலையிலேயே இன்றைய புலம்பெயர் ரசிகர்கள் வாழ்கின்றனர்.இப்படியான நிலையில் எமது ரசிகர்கள் வாழ்வார்களேயானால் எம்மால் ஒரு சிறந்த ஒரு ஈழ சினிமாவையே அல்லது எமக்கான ஒரு தனித்துவமான படைப்புகளையோ உருவாக்க முடியாது என்பது திண்ணம்.
ஆகவே மதிப்பிற்குரிய கலைஞர்களே, ரசிகர்களே
கலை என்பது போர்வையல்ல குளிரும் போது மட்டும் போர்த்திக்கொள்ள. கலை என்பது ஆடை போன்றது. எமது மானம்,ஒழுக்கம் நோக்கம் என்பவற்றை கட்டிக்காக்கும் மிகப்பெரிய சக்திகொண்டது என்பதனை உணர்ந்து செயற்படுமாறு கேட்டு நிற்கின்றோம்.
– காவியா